15 people arrested! | ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது!

மும்பை, : மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்திய, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், தடை செய்யப்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, 15 பேரை கைது செய்தனர்.

மஹாராஷ்டிராவில், தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையோர் சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், இந்தாண்டு துவக்கம் முதலே ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடையோர் மீது, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

வெடி பொருட்கள்

மஹாராஷ்டிராவின் புனே, தானே ஆகிய மாவட்டங்களில் சில மாதங்களுக்கு முன், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி சிலரை கைது செய்தனர்.

கடந்த ஆகஸ்டில், தானே மாவட்டத்தில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஐந்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அக்டோபரில், என்.ஐ.ஏ., அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த ஐ.எஸ்., பயங்கரவாதி ஷாநவாஸ் ஆலமை, புதுடில்லி போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக- அர்ஷத் வார்சி, முகமது ரிஸ்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புனேயில், ஐ.எஸ்., பயங்கரவாத சதித் திட்டம் தொடர்பான வழக்கில், கடந்த மாதம் என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில், பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, வன்முறையை துாண்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். மஹாராஷ்டிராவின் தானே, புனே ஆகிய மாவட்டங்களில், 40க்கும் மேற்பட்ட இடங்களிலும், கர்நாடக தலைநகர் பெங்களூரில், ஓர் இடத்திலும் இந்த சோதனை நடந்தது.

31 இடங்கள்

அதிகபட்சமாக, தானே கிராமப்புறப் பகுதிகளில், 31 இடங்களில் சோதனை நடந்தது. அப்போது, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, சந்தேகத்தின் அடிப்படையில், 15 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களில் ஒருவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது:

தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர், மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் இருந்து செயல்பட்டு வந்தவர்கள்.

இவர்கள், நாட்டின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதை நோக்கமாக வைத்திருந்தனர். மேலும், நாடு முழுதும் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை பரப்புவதற்கான சதித்திட்டத்தை, இவர்கள் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.

வெளிநாடுகளில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளின் ஆலோசனையின்படி, இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். நாட்டில் வன்முறையை ஊக்குவிக்க சதித்திட்டங்களை தீட்டியதோடு, பல்வேறு வெடி பொருட்களையும் இவர்கள் தயாரித்து வந்து உள்ளனர்.

மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நடந்த சோதனைகளில், கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம், துப்பாக்கிகள், ஆயுதங்கள், ஆவணங்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட, 15 பேரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதில் தொடர்புடையோர் விரைவில் கைது செய்யப்படுவர்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

மருத்துவர்

கைது செய்யப்பட்ட 15 பேரில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில், டானரி சாலையில் உள்ள ஒரு உருது பள்ளி நடத்தி வந்த ஒருவரும் அடங்குவார். இவரது மனைவி மருத்துவர்.

இவரிடம் இருந்து, மொபைல் போன், மடிக்கணினி, 16 லட்சத்து 42,000 ரூபாய் ரொக்க பணம், டிஜிட்டல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை கர்நாடகாவில் விரிவுபடுத்த, முக்கிய தகவல்களை சேகரிக்கும் நபராக இவர் பணியாற்றி வந்தார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.