ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், அம்மாநிலத்தின் எர்ரவல்லி பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு குளியல் அறையில் கால் சறுக்கி விழுந்தார். இதையடுத்து அவரை ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர்.
மருத்துவ பரிசோதனையில் சந்திரசேகர ராவுக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் இதன் பிறகு 6 முதல் 8 வாரங்கள் வரை அவர் முழுமையாக ஓய்வு எடுக்க நேரிடும் எனவும் யசோதா மருத்துவமனை சார்பில் அவரது குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 2 மணிநேரம் வரை சந்திரசேகர ராவுக்கு இடுப்பு எலும்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளத்தில் “தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆருக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தகவல் அறிந்ததும், மருத்துவத்துறை முதன்மை செயலாளரை யசோதா மருத்துவமனைக்கு அனுப்பி நலம் விசாரிக்கச் செய்தார்.
மேலும் சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய கடவுளை பிராத்தனை செய்வதாகவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இதேபோன்று, தெலங்கானா ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் சந்திரசேகர ராவின் உடல் நலம் குறித்து அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்தனர். அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென கடவுளை பிராத்தனை செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.