ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இன்று (டிச.11) உச்ச நிதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பரவலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இதனிடையே ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
வழக்கு விசாரணையின்போது, தற்போது 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு கல்வீச்சு சம்பவங்கள், கடையடைப்பு, முழு அடைப்புப் போராட்டங்கள் என எதுவும் நடத்தப்படுவது இல்லை. இந்நிலையில் பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு விஷயங்களை மத்திய அரசு அங்கு செய்து வருகிறது. எனவே, ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவித்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒட்டி அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.