IPL Auction 2024: 17ஆவது ஐபிஎல் சீசன் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளன. அடுத்த தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில், தொடர் இந்தியாவில்தான் நடைபெறுமா அல்லது மக்களவை தேர்தல் காரணமாக ஒரு கட்டமாக இந்தியாவிலும், மற்றொரு கட்டம் வெளிநாட்டிலும் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் ஏலம் 2024
இந்த சூழலில், வரும் ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை (டிச. 19) துபாயில் நடைபெறுகிறது. குறிப்பாக, ஐபிஎல் ஏலம் முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 77 பேர் ஒட்டுமொத்தமாக 10 அணிகளுக்கு தேவைப்படுகிறது. இந்த 77 இடங்களை நிரப்ப ஏறத்தாழ 1166 வீரர்கள் ஏலத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.
முக்கிய இந்திய வீரர்கள் யார் யார்?
வீரர்கள் ரூ.2 கோடி, ரூ.1.5 கோடி, ரூ.1 கோடி, ரூ. 50 லட்சம் என பல வகைகளில் தங்களின் அடிப்படைத் தொகை (Base Price) வரம்பை நிர்ணயித்துள்ளனர். அதில், ரூ. 2 கோடி அடிப்படை தொகை வகைப்பாட்டில் கேதர் ஜாதவ், ஹர்ஷல் படேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் ஆகிய இந்திய வீரர்கள் மட்டுமே உள்ளனர், மற்ற அனைவரும் வெளிநாட்டினர்தான். ரூ.1.5 கோடி மற்றும் ரூ. 1 கோடி அடிப்படைத் தொகை வகைப்பாட்டில் முக்கியமான இந்திய வீரர்கள் என யாருமில்லை.
எந்த அணி அதிக தொகை வைத்துள்ளது?
மேலும், 10 அணிகள் மொத்தமாக ரூ.262.95 கோடியை கையிருப்பில் வைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு அணிக்கு முதலில் ரூ.95 கோடி கையிருப்பாக கொடுக்கப்பட்டது. அதில் இந்த ஏலத்தை முன்னிட்டு ரூ. 5 கோடியை அதிகரித்து மொத்தம் கையிருப்பு ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டது. இதில் வீரர்களை எடுத்தது போக மீதம் இருக்கும் தொகையை கொண்டு இந்த ஏலத்தில் அணிகள் வீரர்களை எடுக்க உள்ளனர். அந்த வகையில் அதிகபட்சமாக குஜராத் அணி (Gujarat Titans Purse Amount) தற்போது ரூ.38.15 கோடியை கையிருப்பில் வைத்துள்ளது. குறைந்தபட்சமாக லக்னோ அணி (Lucknow Super Giants Purse Amount) 13.15 கோடியை கையிருப்பில் வைத்துள்ளது.
IPL Auction 2024: எப்போது, எங்கே பார்ப்பது?
இந்த நிலையில், முக்கிய வீரர்களை அள்ளிப்போட அனைத்து அணிகளும் ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மேலும், தங்களின் அபிமான அணியில் உள்ள இடங்களை சரியான வீரர் வந்து நிரப்புவாரா, நட்சத்திர வீரர்களை எந்த அணிகள் வாங்க உள்ளன, எந்தெந்த வீரருக்கு எந்தெந்த அணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்படும் என பல எதிர்பார்ப்புகள் இப்போதே எழுந்துவிட்டன.
2024 சீசனுக்கான ஐபிஎல் மினி (IPL Mini Auction) ஏலம் துபாய் கொக்கோ கோலா அரினா (Coco-Cola Arena) பகுதியில் வரும் டிச. 19ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் (Star S), ஓடிடியில் ஜியோ சினிமாஸ் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது. நேரம் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.