முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: போரிலிருந்து பின்வாங்கிய பல்கேரியாவும், அது ஏற்படுத்திய தாக்கமும்!

பல்கேரியா, செர்பியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மைய சக்திகளின் படைகளின் உதவியோடு செர்பியாவின் கணிசமான நிலப்பரப்புகளை அது தன் வசம் கொண்டு வந்தது. கூடவே மாசிடோனியாவிலும் கால் பதித்தது. இதன் காரணமாக அக்கம் பக்கத்து நாடுகள் மிகவும் பதற்றமடைந்தன.

தனிப்பட்ட முறையில் பல்கேரியாவுக்கு (செர்பியா மற்றும் கிரீஸ் நாடுகளிலிருந்து) நிலப்பரப்புகள் கிடைத்தன. ஆனால் போகப் போக முதலாம் உலகப்போரில் மைய சக்திகளின் நிலை ஆட்டம் காணத் தொடங்கியது. ஐ.நா.சபை நுழைந்ததும் மேற்கு முனையில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஹங்கேரி தோல்விகளைக் கண்டதும் பல்கேரியாவை கொஞ்சம் நிலைகுலைய வைத்தது. மைய சக்திகள் பெரும் தோல்வி அடைந்தால் தான் புதிதாகப் பெற்ற பகுதிகளை மட்டுமல்ல ஏற்கெனவே தன்னிடம் உள்ள நிலப்பரப்பிலும் கணிசமானவற்றை நேச நாடுகளிடம் இழந்து விடவேண்டும் என்று கவலை கொண்டது பல்கேரியா.

A German postcard to commemorate the alliance with Bulgaria

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பிரிட்டன், பிரான்ஸ், கிரீஸ், செர்பியா ஆகியவற்றின் ராணுவப் படைகள் ஒன்றிணைந்து பல்கேரியாவைத் தாக்கத் திட்டமிட்டன. இதையறிந்ததும் பல்கேரியா நம்பிக்கை இழந்தது.

ஜெர்மனி உள்ளிட்ட மைய சக்திகளால் பல்கேரியாவுக்குப் பெரிதாக உதவ முடியவில்லை. காரணம் அவற்றின் ராணுவம் மேற்கு மூலையில் குவிக்கப்பட்டிருந்தது. தவிர அவை பெரும் இழப்புகளையும் சந்தித்து வந்து கொண்டிருந்தது.

செப்டம்பர் 29, 1918 அன்று போரிலிருந்து விலகிக் கொள்வதாக வெளிப்படையாகவே அறிவித்தது பல்கேரியா. நேச நாடுகளுடன் அமைதி ஒப்பந்தமும் போட்டுக்கொண்டது. நவம்பர் 27 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் முதலாம் உலகப்போரில் பல்கேரியாவின் பங்கு ஒரு முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி பல்கேரியா புதிதாக ஆக்கிரமித்து தன் வசம் கொண்டுவந்த பகுதிகளை அந்தந்த நாடுகளுக்கு அளித்துவிட வேண்டும். தன் ராணுவத்தின் அளவை சுருக்கிக் கொள்ள வேண்டும். தான் போரிட்ட நாடுகளுக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பல்கேரியாவில் ஒரு குடியரசு ஆட்சி அமைந்தது. மைய சக்திகளின் சார்பான போராட்டத்தில் பல்கேரியாவின் பங்குதான் மிக முக்கியமானது என்று கூறிவிட முடியாது. ஆனால் அந்தப் போரின் போக்கை நிர்ணயிப்பதில் அது ஒரு திருப்புமுனையாக விளங்கியது. மைய சக்திகளின் சார்பில் முதன்முதலாகப் போரிலிருந்து பின்வாங்கியது பல்கேரியா.

*********

ஆஸ்திரியா – ஹங்கேரி

ஆஸ்திரியா ஹங்கேரி சாம்ராஜ்யத்திலும் பிளவு உண்டானது. 1867ல் உருவான அவியல் நாடு இது. ஆஸ்திரியா – ஹங்கேரி என்ற பெயரில் அழைக்கப்பட்ட இதில் இந்த இரு நாடுகளைத் தவிர ஸ்லோவாகியா, செக் குடியரசு, ரொமேனியா, ஸ்லோவேனியா, குரோஷியா, போஸ்னியா ஆகியவற்றுடன் இன்றைய போலந்து, உக்ரைன​ன், ரோமெனியா, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக விளங்கியது.

ஒரு புறம் முதலாம் உலகப்போரில் ஆஸ்திரியா ஹங்கேரி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் மறுபுறம் அந்த நாட்டுக்குள்ளேயே கலவரங்கள் வெடித்தன. பிரிவினை கோஷங்களும் கேட்கத் தொடங்கின.

போலிஷ் மக்கள் தனி நாடு வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கினர். போலந்து என்ற தனிநாடு எப்படியும் உருவாகிவிடும் என்பதும் அது எப்போது என்பதுதான் கேள்விக்குறி என்பதும் நிதர்சனமாயின.

செக் இன மக்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மறுபுறம் போஸ்னியா, செர்பியா, ஹெர்சகோவ்னியா ஆகிய பகுதிகளில் அதிகம் இருந்த ஸ்லாவ் இன மக்கள் தங்களுக்கென ஒரு தனிநாடு அமைய வேண்டும் என்று தீவிரமாகப் போராட்டங்களில் இறங்கினர். அந்த நாடு யுகோஸ்லாவியா என்ற பெயரில் அமையும் என்றும் தீர்மானித்தனர்.

செக் குடியரசு (Czech Republic)

1918 இறுதியில் ஆஸ்திரியா ஹங்கேரி நாடு நொறுங்கியது. அக்டோபர் 21-ம் தேதி செக்கோஸ்லோவாக்கியா தனி நாடாக ஆனது. செக் மக்கள் குதூகலமடைந்தனர். அதே மாத இறுதியில் யுகோஸ்லாவியா உருவானது. ஸ்லாவ் இன மக்கள் வெற்றிக் களிப்பு அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகியவை பிரிந்து தனித்தனி நாடுகளாயின.

தாங்களே இப்படி உடைந்து கொண்டிருக்கையில் நேச நாடுகளுடன் எப்படிப் போரிட? அதனால் சரணடைந்தனர். அதேசமயம் நேச நாடுகளுடன் அமைதி ஒப்பந்தம் போடுவதற்கு ‘ஆஸ்திரியா ஹங்கேரி’ என்ற நாடே இல்லாத விசித்திர நிலை உண்டானது.

ஜெர்மனி தவித்தது. ரஷ்யா போரிலிருந்து பின் வாங்கிவிட்டது. ஆஸ்திரியா ஹங்கேரி சரணடைந்ததுடன் ஒரு தனிநாடாகவே இல்லாமல் போனது. தவிர அமெரிக்காவும் கனடாவும் தங்களை முழுமையாகப் போரில் ஈடுபடுத்திக் கொள்ள முன்வர, நேச நாடுகளின் பலம் கூடிக்கொண்டே போனது.

பிரிட்டனின் சரக்குக் கப்பல்கள் எல்லாம் அமெரிக்கக் கப்பல்களின் பாதுகாப்புடன் பயணம் செய்தன. இந்தக் கூட்டணியை ஜெர்மனியால் எதிர்கொள்ள முடியவில்லை. அமெரிக்க ராணுவம் புதிது புதிதாக ராணுவ வீரர்களின் தொகுதிகளைப் போர்க்களத்தில் இறக்கிக்கொண்டே இருந்தது.

Hungarian and Bulgarian forces at Kladovo, World War I propaganda

ஜெர்மனியின் பொருளாதாரம் பெரிதும் மாற்றம் கண்டு கொண்டிருந்தது. போர்ச் செலவுக்காக அது பெரிய அளவில் கடன் வாங்க, நாட்டின் பணவீக்கம் அதிகமானது. தேசிய கடன் கூடிக் கொண்டே வந்தது. உணவுப் பொருள்கள் குறைந்துவிட்டதால் ரேஷன் முறையில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்ட, இதன் காரணமாக அரசுக்கெதிரான மக்களின் அதிருப்தி கூடிக்கொண்டே வந்தது.

– போர் மூளும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.