
'ரொம்ப வலிக்குது' : மகள் பற்றி விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தயாரிப்பாளராக, நடிகராக உயர்ந்தவர் விஜய் ஆண்டனி. அவருடைய மூத்த மகள் மீரா மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் படித்து வந்த மீராவின் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது.
மறைந்த தனது மகள் பற்றி நேற்று திடீரென உருக்கமான ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா. “மீரா தங்கம், உனது பியானோ உனது தொடுதலுக்காகக் காத்திருக்கிறது, ஏங்குகிறது. நாங்கள் அனைவரும் இன்னும் நம்பாமல் இருக்கிறோம். நீ சீக்கிரம் சென்று விட்டாய் பேபி. இந்த உலகம் உனக்கானதாக இல்லை, ஆனால் அம்மா இங்கே இருக்கிறேன். வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையிலான கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு வெறுமை ஆகிவிட்டது. நான் உன்னை சந்திக்கும் வரை நன்றாகச் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு. லாரா உன்னை மிஸ் செய்கிறாள்.
ரொம்ப வலிக்குது, கடவுள் எனக்கு நிச்சயம் உதவுவார். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த துக்கத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியாது. காலம்தான் குணப்படுத்த வேண்டும், எனக்காக நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்,” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
பாத்திமாவின் இந்தப் பதிவிற்கு ரசிகர்களும், பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.