ரிங்கு சிங்: இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங்கா? – கவாஸ்கர்

ரிங்கு சிங் மீது நம்பிக்கை

இளம் வீரரான ரிங்கு சிங், அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் தேர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்று இப்போது தென்னாப்பிரிக்கா தொடருக்கான 20 ஓவர் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக ஆடியதால், இவரை பினிஷர் ரோலுக்கான சரியான வீரராக நம்புகிறது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ரிங்கு சிங்கை இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங்காக பார்க்கிறார். 2007 டி20 உலகக் கோப்பையில் பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்திய யுவராஜ் சிங்கைப் போலவே ரிங்கு சிங்கும் (Rinku Singh) விளையாடுவார் என்றும், அந்த திறமை அவரிடம் இருப்பதாகவும் கவாஸ்கர் உறுதியாக உள்ளார். 

ரிங்கு சிங் ஐபிஎல் 2023

ரிங்கு சிங்கைப் பொறுத்தவரை கடந்த ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றிருந்தார். இந்த இரு போட்டியிலும் ரிங்கு சிங் ஆடிய ஆட்டம் அவரின் திறமையை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகுக்கும் வெளிகாட்டியது. 

யுவராஜ் சிங் அதிரடி ஆட்டம்

அவரின் ஆட்டம் 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையில் யுவராஜ் சிங் (Yuvraj Singh) விளையாடிதைப் போலவே இருந்தது. அந்த தொடரில் யுவராஜ் சிங் பினிஷராக சிறப்பாக செயல்பட்டார். அவர் பேட்டிங்கில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அதிரடி ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு யுவராஜ் சிங் அமர்களப்படுத்தினார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் 70 ரன்கள் குவித்ததால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடிந்தது. 

கவாஸ்கர் வைத்திருக்கும் நம்பிக்கை

அதேபோன்ற திறமை ரிங்கு சிங்கிடமும் இருக்கிறது. யுவராஜ் சிங் விளையாடியதில் ஒரு பகுதியை அவர் விளையாடினால் கூட ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் ரிங்கு சிங்கிடம் திறமை இருக்கிறது. அவரால் இதனை செய்ய முடியும். இந்திய அணியின் கிரிக்கெட் நிரவாகமும் இதனை தான் எதிர்பார்க்கிறது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் இதுவரை ரிங்கு சிங் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். இந்திய அணியில் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என நம்புவதாக கவாஸ்கர்(Sunil Gavaskar) தெரிவித்திருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.