ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒடிசாவில் ‘பவுத் டிஸ்ட்டிலெரி’ எனப்படும் மதுபான ஆலை மற்றும் அதற்குச் சொந்தமான இடங்களிலும், இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பிலுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தினர். அப்போது 176 பைகளில் 500, 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட பணம் அனைத்தும் ஒடிசாவில் எண்ணப்பட்டது.
இந்த நிலையில், பணம் எண்ணும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியான தகவலில், 40 பணம் எண்ணும் இயந்திரங்களுடன், 3 வங்கிகளின் ஐம்பது அதிகாரிகள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஐந்து நாள்கள் தொடர்ந்து பணம் எண்ணப்பட்டது. அதன் இறுதியில் கைபற்றப்பட்டப் பணம் மொத்தம் ரூ.353.5 கோடி எனத் தெரியவந்திருக்கிறது. இதில் பாலங்கிர் மாவட்டத்தில் ரூ.305 கோடியும், சம்பல்பூரில் ரூ.37.5 கோடியும், டிட்லகர் பகுதியில் ரூ.11 கோடியும் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட அனைத்து பணத்தையும் இன்று பாலங்கிரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) பிரதான கிளையில் டெபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “தீரஜ் சாஹுவும், அவரது தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் மக்களைச் சுரண்ட முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும். ஊழலுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்குப் பிரதமர் மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப் பெறப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “தீரஜ் சாஹுவின் தொழிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிக அளவு பணம் பறிமுதல் செய்தது குறித்து அவர்தான் விளக்கமளிக்க முடியும். உரியப் பதிலை அவர் அளித்தாக வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.