சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக திருநடை கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலை திறந்தது. அன்றிலிருந்து பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. கடந்த சில நாள்களாக பக்தர்கள் நிலக்கல்லுக்கு செல்ல முடியாத அளவுக்கு வாகன நெரிசலும், பம்பையில் இருந்து சந்நிதானம் செல்ல சுமார் 18 மணி நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.
குழந்தைகளுக்கு தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு சரியான பஸ் வசதி ஏற்படுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே சபரிமலையில் தரிசனம் செய்யாமல் பக்தர்கள் வீடுதிரும்பிய சம்பவங்களும் அரங்கேறின. ஒரு பகுதி பக்தர்கள் பந்தளம் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் இருமுடியை சமர்ப்பித்துள்ளனர். சபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில் இருந்து அரசு பஸ்ஸில் பம்பைக்கு பயணம் செய்ததுடன், பம்பையில் இருந்து சபரிமலைவரை நடந்து சென்று ஆய்வு செய்தார். சபரிமலையில் மீடியாக்களை சந்தித்த அவர், சபரிமலை விஷயத்தை எதிர்கட்சிகள் அரசியல் ஆக்க முயல்வதாகவும், சிலர் எழுதி வைத்ததை படித்தது போன்று வேண்டும் என்றே குற்றச்சாட்டுக்களை மீடியாக்களிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சபரிமலை பதினெட்டாம் படி மழையில் நனையாமல் இருக்கும் வகையில் மேற்கூரை அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள கல் தூண்களால்தான் அதிக அளவு பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பதினெட்டாம் படியை ஒட்டி இப்போது கல் தூண் அமைக்கப்பட்டுள்ள இடத்தில்தான் போலீஸார் நின்றுகொண்டு பக்தர்களை பதினெட்டாம் படியில் ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால், மேற்கூரை பணிக்காக கல் துண்கள் அமைக்கப்பட்டதால் பக்தர்களை ஏற்றிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போன்று நிமிடத்துக்கு 750 பக்தர்களை ஏற்றிவிட முடியாத நிலை உள்ளதாகவும், நிமிடத்துக்கு சுமார் 450 பக்தர்களையே பதினெட்டாம் படியில் ஏற்றிவிட முடிவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. மொத்தத்தில் சபரிமலையில் நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு காரணம் பதினெட்டாம் படிக்கு முன்பு உள்ள கல் தூண்கள்தான் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சபரிமலையில் ஐயப்பசுவாமி கோயிலில் பதினெட்டாம் படியில் ஏறிச்செல்வது புனித நிகழ்வாக கருதப்படுகிறது. பதினெட்டாம் படியில் விளக்கு ஏற்றி அவ்வப்போது படி பூஜைகள் செய்யப்படுவதும் வழக்கம். மழைக்காலத்தில் படிபூஜைக்கு தடை ஏற்பட்டு வந்தது. மேலும் மழைகாலத்தில் படிபூஜை நடத்துவதற்காக தார்ப்பாய் கட்டப்பட்டும் வந்தன. இதற்கெல்லாம் தீர்வு ஏற்படுத்தும் விதமாகவும். ஐம்பொன்னால் ஆன பதினெட்டாம் படியை பாதுகாக்கும் விதமாகவும் ஹைட்ராலிக் மேற்கூரை அமைக்க தேவசம்போர்டு கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதற்கு ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நன்கொடை வழங்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் பங்களிப்புடன் மேற்கூரை அமைக்க கல் தூண்கள் அமைகப்பட்டுள்ளன. மேற்கூரை பணிகள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளன. இதற்கிடையே பதினெட்டாம் படியின் அழகையும், புனிதத்தையும் கெடுப்பதாக கூறி கல் தூண்கள் அமைத்ததற்கு எதிராக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கல் தூண்களால் சபரிமலையில் பக்தர்கள் நெரிசல் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரிகளும் அரசிடம் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.