பண்டிகை காலங்களில் இனிப்பைக் குறைக்கும் டெக்னிக் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் -11 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

இனிப்பு எடு கொண்டாடு என்று கொண்டாட்டம் என்றாலே இனிப்புகள் என்று ரொம்பத் தான் பழகி விட்டோம். ஆனால் அவற்றைத் தவிர்த்து உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களும் உண்டே.. பொதுவிலேயே வீதியெங்கும் இனிப்பு வகைகள் விற்கும் கடைகள் கண்ணைப் பறித்தாலும் மருத்துவர்கள் எல்லாரும் எல்லோருக்குமே வலியுறுத்திச் சொல்வது இனிப்பைக் குறையுங்கள் என்று தான். நம் குடும்பத்துக்கு என நாம் சமைக்கும் போது தான் இவை இவை நம் குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கு உகந்தது இவை இவை தேவையில்லாத கேலரிகளைக் கூட்டும் இவ்வளவு வெண்ணெய் நெய் சேர்த்துச் செய்வதைத் தவிர்க்கலாம் என்றெல்லாம் யோசிக்க முடியும்.

Representational image

வெளி உணவுகளை நாடும் போது நம் மனது வீட்டில் இருந்து மாறுபட்டுக் கிடைக்கும் சுவையையும் சேர்த்தே எதிர் பார்க்கும் இல்லையா…அது தானே இயல்பும் கூட.. சரி…இனிப்புகளுக்கு வருவோம். இப்பவெல்லாம் அந்த நாட்கள் போல் இனிப்பு வகைகளில் இரண்டரை அல்லது மூன்று பங்கு இனிப்பு பெரும்பாலும் நிறையப் பேர் சேர்ப்பதில்லை. அவசியமும் இல்லை. ஆனால் கடைகளில் எல்லாருக்கும் பிடிப்பது போல் சரி அளவு தான் பெரும்பாலும் சேர்ப்பார்கள். வீட்டில் நாம் இனிப்பின் அளவை முடிந்த அளவு குறைத்துப் போட்டுச் செய்யலாம்.

நீரிழிவு உள்ளவர்களுக்கும் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கும் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று சேர்த்துக் கொண்டே போவது கடினம். பொதுவாகவே இனிப்பைக் குறைக்கவும் தவிர்க்கவும் நினைப்பவர்களுக்கு பண்டிகை காலங்களில் இனிப்பைக் குறைத்து அல்லது நீக்கிச் செய்யும் சில வழிகளைப் பார்ப்போம்.

முதலில் நான் பின்பற்றும் வழி ஒன்றைக் கூறுகிறேன். பண்டிகை காலத்துக்குப் பலகாரங்கள் செய்கையில் முறுக்கு தட்டை மிக்சர் போன்ற கார வகைகளுக்கு செய்யும் அளவில் முதலிடம் கொடுப்பேன். பிறகு அதிரசம் போன்ற வெல்லப் பலகாரம் கொஞ்சம். அதன் பிறகே சர்க்கரை சேர்த்தவை சிறிதளவு…. மிக்சருக்கு பதிலாக முழுக் கடலை வகைகளை மட்டும் வைத்துச் செய்யும் நவதானிய ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். வீட்டில் எளிதாகச் செய்ய இன்னும் ஒரு குறிப்பு தருகிறேன். நிலக்கடலை பொட்டுக் கடலை முந்திரி பாதாம் கொப்பரைக் கீற்று சிறிது அவல் மற்றும் பொரி இவற்றைத் தனித்தனியே சிறிதளவு எண்ணெயில் வறுத்து எடுக்கவும். ஒரு பெரிய கடாயில் சிறிது நெய் அல்லது பிடித்தவர்கள் தேங்காய் எண்ணெய் சூடு செய்து கறிவேப்பிலை பொரித்து அடுப்பை அணைக்கவும். அந்தச்சூட்டிலேயே உங்களுக்கு விருப்பமான காரம் உப்பு மசாலா பொடி வகைகளைச் சேர்த்து வறுத்த வற்றையும் சேர்த்துக் கலக்கவும். எண்ணெய் அல்லது நெய் பிரட்டும் அளவுக்கும் பொடி வகைகள் ஒட்டும் அளவுக்கும் சேர்த்தால் போதுமானது.

Representational image

அடுத்து மைசூர்பாகு செய்கையில் அதிக பட்சம் ஒன்றேகால் பங்கு இனிப்பு சேர்த்தால் போதும். ஒரு பங்குக்குப் பழகிக் கொண்டால் இன்னும் நல்லதே.

சரி….நீரிழிவுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்பீர்கள். குலாப் ஜாமூன் உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போடுமுன் தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இனிப்பு சேர்க்கக் கூடாதவர்களுக்கு பாதாம் பிஸ்தா போன்ற பருப்புத் துகள்கள் சேர்த்து வாசனை ஊட்டி சற்று சுண்ட வைத்த கொஞ்சம் சூடான பாலில் அவர்களுக்கு அந்த உருண்டைகள் சிலவற்றைச் சாப்பிடும் முன் சேர்த்துக் கொடுங்கள். முன்னதாக ஊற விட்டால் கரைந்து விடும்.

அடுத்து இனிப்பைக் குறைக்க விரும்பும் எல்லோருக்குமே வேறு வழிகள் சில பார்ப்போம்.

லட்டு செய்வதற்கு பூந்தியை சற்று மென்மையாகப் பொரித்து சர்க்கரைப் பாகில் போடுவார்கள். நாம் அதையே மிக்சருக்குப் போடுவது போல் சிவக்கப் பொரித்து தனியாக எடுத்துக் கொள்வோம். தேவைப்படும் போது ஒரு கப்பில் பொரித்த பூந்தி கொஞ்சம் எடுத்து அரை டீஸ்பூன் கல்கண்டுத் தூளுடன் பாதாம் பருப்பு ஒரு குட்டித் துண்டு கிராம்பு ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் பொடித்து சொட்டு நெய்யுடன் கலந்து ஒரு தட்டில் பரத்தி அதில் பொரித்த பூந்தியைக் கலந்து சுவைத்துப் பாருங்கள்.

இன்னும் பாகில் பிரட்டிச் செய்யும் கோதுமை இனிப்பு பிஸ்கட்டுகள் மற்றும் மனோகரம் ( இனிப்புத் தேன்குழல்) இவற்றை மிகக் மிகக் குறைந்த அளவு வெல்லம் அல்லது கல்கண்டில் கெட்டிப் பாகு செய்து அதில் பொரித்த வற்றைப் பிரட்டி எடுத்து விடுங்கள். அங்கும் இங்கும் லேசாக பாகு ஒட்டி இருந்தாலே போதுமானது. அதுபோல் கோவாவில் மிகச் சிறிய அளவு இனிப்பு சேர்த்தால் போதுமானது.

Representational image

இதை ஒட்டி இன்னொரு சஜஷனும் தருகிறேன். சாதாரணமாக நிலக்கடலை மற்றும் எள் உருண்டைகள் பிடிக்க வெல்லம் அதிகம் தேவைப்படும். பிசறினால் போல் செய்யும் இனிப்புக்கு ரொம்பக் கொஞ்சமே தேவைப்படும். மூன்று கப் கடலைக்கு கிட்டத்தட்ட முக்கால் கப் மிஞ்சினால் ஒரு கப் வெல்லமே போதும். எள்ளுக்கும் அப்படியே. வெல்லப் பாகு பதமே முக்கியம். நன்கு பாகு முற்றி இருக்கவேண்டும். தண்ணீரில் சிறிது இட்டால் மிட்டாய் போல் ஆக வேண்டும். தீய்ந்து விடாமலும் கவனம். இந்த நிலையில் அடுப்பை அணைத்து முறுகாமல் இருக்க சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து அதில் வறுத்த கடலை அல்லது வறுத்த எள்ளை உடனேயே சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து கொண்டு வரவேண்டும். குறைந்த வெல்லம் முற்றின பாகு வறுத்த கடலை எல்லாம் சேர்ந்து பொலபொல வென்று கரகரப்பாக வரும். காற்றுப் புகாத டப்பாவில் வைத்துப் பயன் படுத்த வேண்டியது தான். நான் வழக்கமாக எள்ளில் இது மாதிரி செய்து வைத்துக் கொண்டு சிறிதளவு தினம் எடுத்துக் கொள்வது வழக்கம். முதலில் கொஞ்சமாகச் செய்து கூட முயற்சிக்கலாம்.

தீபாவளி மட்டும் அல்லாது கார்த்திகை போன்ற பண்டிகைகளின் போதும் வெல்ல அப்பம் கொஞ்சம் உப்பு அப்பம் நிறைய அது போல் வெல்லச்சீடை எனில் உப்புச் சீடை சர்க்கரைப் பொங்கல் எனில் வெண்பொங்கல் என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். முக்கால் வாசியும் அதிக அளவு சர்க்கரைப் பாகில் ஊறும் இனிப்புகள் தேவையா என ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள்.

Representational image

பொரித்த ஜாமூன் உருண்டைகளை ஒரு தட்டில் சிறிது கல்கண்டுத்துத்தூள் பரப்பி அதில் பிரட்டி எடுத்துச் சுவையுங்கள். சர்க்கரையின் அளவை எவ்வளவு குறைக்க முடிகிறது என்று நீங்களே பார்த்து அதிசயிப்பீர்கள்.

இந்த பண்டிகைக் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் இனிப்பு சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறக்கும் வல்லுனர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறேன். அவற்றைச் சுவைக்க முடியாதவர்களுக்கே நான் தந்த குறிப்புகள்.

இன்னும் பார்ப்போமா…

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.