ஒரு கொலை அதைத் தொடர்ந்து அரங்கேறும் பழிவாங்கல் படலம், நடுவில் மாட்டும் ஒரு சாமானியனின் கனவு போன்றவற்றைப் பேசுகிறது `ஃபைட் கிளப்’.
சென்னை மீனவக் குடியிருப்பு பகுதியில் வளரும் சிறுவன் செல்வாவுக்குக் கால்பந்தாட்டத்தில் சாதிக்கப் பெரிய வாய்ப்பு கிடைக்கிறது. மக்கள் பிரச்னைக்கு முன்னிற்கும் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்) அதற்கு உதவ முன்வருகிறார். அந்நேரத்தில் போதைப் பொருள் விற்கத் தடையாக இருக்கும் பெஞ்சமினை அவரது தம்பி ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்) கிருபாகரன் (சங்கர் தாஸ்) என்பவருடன் சேர்ந்து கொல்கிறார். ஆனால் கிருபாகரன் அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்க, சிறைக்குச் செல்கிறார் ஜோசப். சிறுவன் செல்வாவின் கால்பந்தாட்ட கனவும் தடைப்படுகிறது.
20 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுதலையாகும் ஜோசப், கிருபாகரன் அரசியல் செல்வாக்கோடு வளர்ந்திருப்பதைப் பார்க்கிறார். இந்நிலையில் கிருபாவின் மச்சான் கார்த்திக்கும் (சரவணவேல்) செல்வாவுக்கும் (விஜய் குமார்) பகையிருப்பதை அறிந்து கொள்கிறார் ஜோசப். செல்வாவை பகடைக்காயாகப் பயன்படுத்தி கிருபாகரனைப் பழிதீர்க்க முயற்சி செய்கிறார். செல்வாவின் கனவு என்னவானது, இந்தப் பழிவாங்கும் படலம் என்னவானது என்பதே ‘ஃபைட் கிளப்’ படத்தின் கதை!
பதின்பருவத்து குறும்புத்தனம், நரம்பு முறுக்கேறி வெளுத்து வாங்கும் கோபம் என அதிரடி இளைஞராகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் ‘உறியடி’ விஜய்குமார். சண்டைக் காட்சிகளுக்கு அவரின் பங்களிப்பைப் பார்க்கும்போது ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன. ஜோசப்பாக நடித்துள்ள அவினாஷ் ரகுதேவன் துரோகத்தின் வலி, சிரித்துக்கொண்டே மாறும் வஞ்சம் தீர்க்கும் முகபாவனை எனப் பழிதீர்க்கும் படலத்தின் வீரியத்தை வசனமே இல்லாமல் பார்வையிலேயே கடத்துகிறார். பெஞ்சமினாக வரும் கார்த்திகேயன் சந்தானத்தின் நடிப்பில் குறையேதுமில்லை. வில்லன்களாக வரும் சங்கர் தாஸ், சரவண வேல் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இது தவிர பாய்ஸ் ஹாஸ்டல் போல நிரம்பியிருக்கும் துணை நடிகர்களின் நடிப்பும் யதார்த்தமாகவே இருக்கிறது. நாயகி மோனிஷா மோகன் மேனன் ‘செத்தாலும் வராதே’ என்று முதல் பாதியில் வரும் காமெடி வசனத்தோடு காணாமல் போனவர், க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சாவில்தான் மீண்டும் வருகிறார். பாவம்!
ஒளிப்பதிவில் வைடு ஆங்கிள்களை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருக்கிறது. பொதுக்கூட்டத்தைத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் காட்சி, சண்டையில் ஓடும் சேஸிங் காட்சிகள் என கேமரா கோணங்களைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார். இருப்பினும் சில இரவு நேரக் காட்சிகளில் ‘நாய்ஸ்’ எட்டிப்பார்க்கிறது. பின்னணி இசையில் படம் நெடுக கடைசி ஓவரில் ஆடும் பேட்ஸ்மேனைப் போல சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. படத்தில் வரும் ‘மலையாள பாடல்’, ‘ராவண மவன்’, ரெட்ரோ ‘மஞ்ச குருவி’ பேண்ட் வாத்திய இசை என அனைத்தும் அடிப்பொலி. படத்தொகுப்பாளர் கிருபாகரன் முற்பாதியைச் சுவாரஸ்யமாகக் கோர்த்த நேர்த்தி, இரண்டாம் பாதியில் காணவில்லை. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை வரும் சண்டைக் காட்சிகளில் முடிந்தவரை வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்கள் விக்கி மற்றும் அம்ரின் அபூபக்கர் ஸ்டன்ட் கூட்டணி.
‘இந்த சண்ட யார் செத்தாலும் நிற்காது’ என்ற தலைமுறை பகையையும், துரோகத்தின் விளைவையும் காட்ட முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அப்பாஸ் ஏ ரஹ்மத். வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் அதைத் திரைக்கதையாக வழங்கிய விதத்தில் முற்பாதியில் பாஸ் ஆகிறார்கள். இருப்பினும் பிற்பாதி வளவளவென நீளும் காட்சிகள், தட்டையான திரைக்கதை எனப் படமே பலவீனமாகிறது. போதைக்கு எதிராக வசனம் பேசும் கதாநாயகன் படம் நெடுக போதைப் பொருளைப் பயன்படுத்திக் கொண்டே இருப்பது நகைமுரண். அதை அவரே வசனத்தில் குறிப்பிட்டுப் பேசுவது சிரிப்பை வரவைக்கிறது.
பேச்சு வழக்கில் அனைவரும் மெட்ராஸ் பாஷையைப் பேசினாலும், காட்டப்படுகிற இடமெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கடலோர பகுதியாக இருப்பது கதையோடு ஒன்றவிடாமல் நம்மை அந்நியமாக்குகிறது. மேலும் பல இடங்கள் வெற்றிமாறனின் ‘வடசென்னை’, ‘அங்கமலி டைரிஸ்’ போன்ற படங்களையும் நினைவூட்டுகின்றன. ஒரு கதாபாத்திரம் மரணிக்கிறது என்றால் அக்கதாபாத்திரத்துக்கும் பார்வையாளர்களுக்கும் பிணைப்பு இருந்தால்தான் எமோஷன் உருவாகும். அப்படியான உணர்வைத் தூண்டும் காட்சிகள் படத்தில் எங்குமே இல்லை. மேலும் வடசென்னை என்றால் அடிதடி, போதை என்கிற பன்னெடுங்கால சித்திரிப்புக்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!
ஒட்டுமொத்தமாகத் திரைக்கதையை நம்பாமல் அதீத வன்முறை காட்சிகளை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த `ஃபைட் கிளப்’ ஆரம்ப காட்சிகளில் உண்டாக்கிய எதிர்பார்ப்பைப் பிற்பாதியில் அடித்து நொறுக்கி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.