கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்துவருகிறது. இதற்கிடையில், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனட செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்தபோது, “சீக்கியரின் கொலைக்குப் பிறகு கனடாவில் இருக்கும் பிற நாட்டவரின் உயிருக்கு ஆபத்து இருப்பது போன்ற பிம்பம் ஏற்பட்டது. அதனால், குடிமக்கள் பாதுகாப்பற்ற மனநிலையில் இருந்தார்கள்.

எனவே, எங்கள் மக்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும் அதிகரிக்கவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும்தான் இதைப் பகிரங்கமாகப் பேசினோம். இந்தக் கொலைக்குப் பின்னால் இந்திய அரசாங்கம் இருந்தது என்பதை அறிவோம் அல்லது நாங்கள் நம்புவதற்கு எங்களுக்கு நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. எனவே, இனி இது போன்ற சம்பவங்கள் தொடர்வதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவின் அரசியலமைப்பின்கீழ் பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் இருக்கும் நபர்கள் கனடாவில் என்ன செய்கிறார்கள்… இதற்கு கனடா பதிலளிக்க வேண்டும். வெளிநாட்டில் கொலைகளை செய்வது இந்தியாவின் கொள்கையாக இருந்ததில்லை. இந்தியாவில் எந்த நாட்டுக்கும் எதிராகச் சதி செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகளிலும் இந்தியாவுக்கு எதிராகச் சதி செய்ய அனுமதிக்க மாட்டோம்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் (MEA ) வெளியிட்ட அறிக்கையில், `கனடாவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. கனடாவில் புகலிடம் அளிக்கப்பட்டிருக்கும் காலிஸ்தானி பயங்கரவாதிகளின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில், இந்தக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.