Uttar Pradesh Krishna Janma Bhoomi: Wont Stay High Court Order: Supreme Court On Mathura Land Dispute | கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம்: ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: உ.பி., மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி நிலம் சர்ச்சை தொடர்பான வழக்கில் கள ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

உத்தர பிரதேசத்தின், மதுராவில், கடவுள் கிருஷ்ணன் பிறந்ததாகக் கூறப்படும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இங்குள்ள கிருஷ்ணர் கோவிலை ஒட்டி, ஷாஹி மஸ்ஜித் இத்கா என்ற மசூதி அமைந்துள்ளது. முகலாய ஆட்சியின்போது இங்கிருந்த ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது. கடந்த, 1968ல், ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில், 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள, 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன.

ஆனால், மொத்த பகுதியும் கோவிலுக்கு சொந்தமானது என, ஹிந்துக்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. மசூதி இடத்தில் களஆய்வு செய்வதற்கு உத்தரவிடக் கோரி, ஹிந்துக்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த மதுரா நீதிமன்றம், அனுமதி அளித்தது. இதை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விசுவநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கில், களஆய்வு செய்வதற்கு, தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக ஹிந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சர்கார் ஜெயின் கூறுகையில், அலகாபாத் உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜன.,9 ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், உயர்நீதிமன்ற உத்தரவு நீடிக்கிறது, தடை விதிக்கப்படவில்லை என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.