புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை கண்டித்து, இண்டியா கூட்டணி கட்சிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தின.
மக்களவை அத்துமீறல் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்ககோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள்அமளியில் ஈடுபட்டனர். இதனால்146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்துக்குள் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில், இண்டியா கூட்டணி சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ஜேஎம்எம் கட்சியின் மஹூவா மஜி, திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய கார்கே,‘‘பாஜக ஆட்சியில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், மோடி அரசால் எதுவும் செய்ய முடியாது. நம்மை எவ்வளவுக்கு எவ்வளவு நசுக்கிறார்களோ அந்த அளவுக்கு நாம் வீறு கொண்டு எழுவோம். நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க நாம் ஒன்றிணைந்து போராடுகிறோம்’’ என்றார்.