வானிலை மைய கருவிகள் உலகத்தரத்துக்கு ஒப்பானது; தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பயன்பாட்டில் இருக்கும் கருவிகள், உலகத் தரத்துக்கு ஒப்பானவை என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிக அளவு மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்துக் கூறவில்லை என்று தமிழக அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அதிவேக கணினிகள்: சமீபகாலமாக, சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைக்கோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பான்கள் எல்லாம் உலகத்தரத்துக்கு ஒப்பானவை. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர்ரேடார்களும், தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதில், எக்ஸ் பேன்ட் வகை ரேடார், இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும்.

சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்: இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள், சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகின்றனர். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகளை உலகத்தரம் வாய்ந்தது என்று உலகவானிலை அமைப்பு பாராட்டி உள்ளது. வார்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாக, பெருமளவு உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்கப்பூர்வ மான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும், நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. இத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.