புதிய கரோனா வைரஸுக்கு தடுப்பூசி தேவையில்லை: மத்திய சுகாதாரத் துறை விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 அக்டோபரில் முதல் கரோனா அலை உச்சத்தில் இருந்தது. கடந்த 2021 ஏப்ரலில் 2-வது கரோனா அலை உச்சத்தை தொட்டது. 2021 ஜனவரியில் தடுப்பூசி திட்டம்தொடங்கப்பட்டது. 2 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுமார் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் சுமார் 88 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கடந்த 2022 ஜனவரியில் 3-வது கரோனா அலை ஏற்பட்டபோது நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, 23 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில் புதிய கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பின் (இன்சாகாக்) தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:

இந்தியாவில் சுமார் 88 சதவீதமக்களுக்கு 2 தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணைநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பரவும் ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. இந்த வகை கரோனா வைரஸால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது.

அதேநேரம், நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். எந்த வகையான கரோனா வைரஸ் பரவுகிறது என்பதை கண்டறிய சளி மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம்.பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும். அச்சம்அடைய தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது குளிர்காலம், பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதன்காரணமாக ஜேஎன் 1 வைரஸ் வேகமாக பரவுகிறது. இதன் வீரியம்குறைவாகவே உள்ளது. எனினும் வைரஸ் பரவலை தடுக்க அந்தந்தநாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைசேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் வெளியிட்ட அறிக்கையில், ‘குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து உள்ளது. மக்கள்அச்சப்பட தேவையில்லை. எனினும், மூத்த குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். எக்ஸ்பிபி1 வகை வைரஸுக்காக தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை ஜேஎன்1 வகை வைரஸ் பரவலை தடுப்பதற்கும் பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்துள்ளது.

656 பேருக்கு தொற்று: நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக 656 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 3,742ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.