ஐ.நா சபையின் போர் நிறுத்தத் தீர்மானத்துக்குப் பிறகும், தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிகழ்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இடப் பற்றாக்குறை, பாதுகாப்பற்ற சூழலால், லட்சக்கணக்கான பாலஸ்தீனக் குடிமக்கள் சாலைகளிலும், மைதானங்களிலும், தற்காலிக கூடாரங்களை அமைத்துத் தங்கிவருகிறார்கள்.
கடும் குளிரிலும், மழையிலும், வெள்ளத்திலும் போதிய மருத்துவச் சிகிச்சை, உணவு, தண்ணீர் இல்லாமல் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். காஸாவின் உள்கட்டமைப்பு பெரிதும் சிதைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், இஸ்ரேல், “எங்களின் முக்கியக் கூட்டாளிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், சர்வதேச ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஹமாஸுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும்” எனக் குறிப்பிட்டது. இந்த நிலையில், நேற்று அல்-மகாசி அகதிகள் முகாமில் வான்வழித் தாக்குதல் நடந்திருக்கிறது.
இது குறித்து பாலஸ்தீன அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா, “நெரிசலான குடியிருப்புகள் இருக்கும் அல்-மகாசி அகதிகள் முகாமின் மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதல் மாபெரும் படுகொலை. 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்களது குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் தேடிக்கொண்டிருக்கிறது. பல வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறோம். இனி காஸாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் அளித்திருக்கும் அறிக்கையில், “அல்-மகாசி அகதிகள் முகாம் காஸா பகுதியின் மத்தியில் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்று. இப்போது முகாம் முற்றிலும் தரைமட்டமாகியிருக்கிறது. இந்த இனப்படுகொலையில் பிறந்து இரண்டு வாரங்களேயான குழந்தை உட்பட, உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள். கடந்த வாரம் வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர். அல்-மகாசி முகாம் கடந்த மாதமும் தாக்கப்பட்டது. அப்போது 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களில் அல்-மகாசி முகாமின் சுற்றுப்புறப் பகுதிகள் தீவிர இஸ்ரேலிய ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. முகாமுக்கு அருகாமையில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனை உட்பட பெரும்பாலான மருத்துவமனைகள் சுகாதார வசதிகள் செயல்படாமல் உள்ளன.
காஸா பகுதியில் உள்ள முழு மருத்துவ பராமரிப்பு முறையும் மோசமடைந்து வருகிறது. அக்டோபர் 7 முதல் 20,400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.