புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக சச்சின் பைலட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் மிகப்பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி வதேரா விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக சச்சின் பைலட்டை நியமித்து அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று, உ.பி.யிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரியங்கா காந்திக்கு பதிலாக அவினாஷ் பாண்டே புதிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள காங்கிரஸின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக சச்சின் பைலட் நியமிக்கப்பட்ட நிலையில், தீபா தாஸ்முன்ஷி கேரளா மற்றும் லட்சத்தீவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தெலங்கானா காங்கிரஸை கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநில பொதுச் செயலாளராக ஜி.ஏ. மிர் நியமிக்கப்பட்டு அவரிடம் மேற்கு வங்கத்தின் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த குமாரி செல்ஜா தற்போது உத்தராகண்ட் மாநில பொறுப்பை நம்பியுள்ளார்.
அண்மையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியை பாஜகவிடம் காங்கிரஸ் கட்சி பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.