காசாவில் ஹமாஸ் தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் பலி

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி போரை தொடங்கியது. ஆரம்பத்தில் காசாவை வான்வழியாக மட்டும் தாக்கி வந்த இஸ்ரேல் ராணுவம் பின்னர் தரைவழியாக காசாவுக்குள் ஊடுருவி தாக்குதலை விரிவுப்படுத்தியது.

அதிலும் குறிப்பாக சமீப நாட்களாக தெற்கு காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் இந்த தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் தரப்பு தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தெற்கு மற்றும் மத்திய காசாவில் தரைவழியாக முன்னேறி வந்த இஸ்ரேல் படை வீரர்களை குறி வைத்து ஹமாஸ் அமைப்பினர் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தினர்.

இதில் இஸ்ரேல் வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதன் மூலம் காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கியதில் இருந்து உயிரிழந்த இஸ்ரேல் வீரர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை மொத்தம் 485 இஸ்ரேல் வீரர்கள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.