முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய டீல்… ரிலையன்ஸ் – டிஸ்னி பேச்சுவார்த்தை கன்பார்ம்

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ ஸ்டீரிமிங் துறையில் ஆதிக்கம் செலுத்த கச்சிதமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் ஸ்டிரீமிங் மூலம் முதலில் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் மார்க்கெட்டை காலி செய்தது. இதில் பெரும் நஷ்டத்தை சந்தித்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்திய மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து ரிலையன்ஸூடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தது. இரு நிறுவனங்களும் இது குறித்து பேச்சுவார்த்தையில் இறங்கின. கடந்த சில மாதங்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தை இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. 

ஜியோ நிறுவனத்திற்கு 51 சதவீத பங்குகளும், டிஸ்னி 49 சதவீத பங்குகளையும் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதம் இந்த இரு நிறுவனங்களின் கூட்டணி தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்பு உள்ளது. டிஸ்னி பிளஸ் மற்றும் ஜியோ ஒப்பந்த அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில், இந்த கூட்டணியின் கீழ் 115 தொலைக்காட்சி சேனல்கள்,  டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமாவின் ஸ்ட்ரிமிங் சேனல், 2 லட்சம் மணிநேரத்திற்கான கன்டென்ட் ஆகியவையும் இடம்பெறும். 

இந்த ஒப்பந்தம் (Reliance – Disney plus Hotstar Deal) 1-1.5 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. RIL மற்றும் டிஸ்னி நிறுவனங்களில் இயக்குநர்கள் குழுவில் சம அளவு பிரதிநிதித்துவம் வகிக்கும். ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் குறைந்தது இரண்டு இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள். டிஸ்னி நிறுவனத்தின் பேச்சுவார்த்தைகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஜஸ்டின் வர்ப்ரூக் மற்றும் கெவின் மேயர் ஆகியோர், இந்தியாவில் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை அதிகாரி கே. மாதவன் மற்றும் ஆலோசனை உதவி வழங்கும் தி ரெய்ன் குழு ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். RIL-ன் பேச்சுவார்த்தைகளை முகேஷ் அம்பானியின் முக்கிய ஆலோசகர் மோனோஜ் மோடி தலைமை தாங்குகிறார் என கூறப்படுகிறது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டணி இந்திய மீடியா துறையின் போக்கை மாற்றக்கூடிய ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கூட்டணி மூலம் இந்தியாவில் உள்ள மொத்த மீடியா சந்தையின் 40% க்கும் அதிகமான பங்கை இந்த இரண்டு நிறுவனங்களும் கைப்பற்றும் வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.