அரசியல் கோணத்திலும் ஜெர்மனியின் நிலை ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. 1918 நவம்பர் 9 அன்று இரண்டாம் கைஸர் வில்ஹெல்ம் தன் பதவியைத் துறக்க, அது அரசாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஜெர்மனி குடியரசானது. குடியரசுக்குப் போரில் நாட்டமில்லை.
1918 தொடக்கத்தில் மேற்கு முனையில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லை என்ற நிலை நிலவியது. தொடர்ந்து நான்கு வருடங்களாகத் தன்னை முழுமையாகப் போரில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தது ஜெர்மனி. இதனால் அதன் ராணுவ வீரர்கள் களைப்படைந்து போயிருந்தார்கள். ஏப்ரல் 1917ல் அமெரிக்கா முழுமையாகப் போரில் இறங்கும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
தொடக்கத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது என்றால் அதற்கு அதன் கொள்கை மட்டுமே காரணமல்ல. வர்த்தக உறவுகளும் காரணம். நேச நாடுகள், மைய நாடுகள் அனைத்தோடும் வணிகப் பரிவர்த்தனைகளைச் செய்து வந்தது அமெரிக்கா. என்றாலும் நேச நாடுகளிடம் அதிகப் பரிவு காட்டியது. ஒரு கட்டத்தில் ஜெர்மனி மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்த போது அமெரிக்கா பிரிட்டனுக்குத் தகுந்தாற்போல் நடந்து கொண்டது. ஆக மெல்லமெல்ல அமெரிக்கா ராணுவமும் நேச நாடுகளின் சார்பில் களத்தில் இறக்கி விடப்படும் என்ற நிலைமை உண்டானது.
1917 பிப்ரவரி 3 அன்று ஜெர்மனியுடனான தனது தூதரக உறவை முறித்துக்கொண்டது அமெரிக்கா. ஏப்ரல் 6 அன்று ஜெர்மனியின் மீது போர் என்று அறிவித்தது. அந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி அமெரிக்கப் பயணப் படையின் தலைவரான ஜெனரல் ஜான் பெர்ஷிங் தலைமையில் இங்கிலாந்தை அடைந்தது அமெரிக்க ராணுவம். அந்த ராணுவத்தின் மற்றொரு பகுதி ஜூன் 24 அன்று பிரான்ஸை அடைந்தது.
முதலாம் உலகப்போரில் முக்கிய பங்கு வகித்த ராணுவத் தலைவர்களில் ஒருவர் ஜான் பெர்ஷிங். செல்லமாக ‘பிளாக் ஜாக்’ என்று அழைக்கப்பட்டவர். போரில் நேச நாடுகள் வென்றதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒருவர். இவர் மிகவும் பிடிவாதக்காரர். தங்களுடன் ஒன்றிணைந்து அமெரிக்க ராணுவம் போரில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றன பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ராணுவங்கள். அதை மறுத்தார் பெர்ஷிங். நேச நாடுகள் சார்பில் போரிட்டாலும் அமெரிக்க ராணுவம் தனியாகவே போரில் பங்கெடுத்துக் கொள்ளும் என்றும் தன் தலைமையில் மட்டும்தான் அது இயங்கும் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
வடக்கு பிரான்ஸிலிருந்த ஒரு நகரம் ஹாமெல். அங்கு நடைபெற்ற போரில் ஆஸ்திரேலிய ராணுவமும் அமெரிக்க ராணுவமும் மிக வெற்றிகரமான தாக்குதல்களை ஜெர்மனிக்கு எதிராக நிகழ்த்தின. இங்குதான் முதன்முதலாக அமெரிக்கா முதலாம் உலகப்போரில் பங்கேற்றது எனலாம். இதில் மட்டும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அல்லாத வேறு அதிகாரிகளுடன் அமெரிக்க ராணுவம் இயங்கியது. முக்கியமாக ஆஸ்திரேலிய ராணுவத்துடன்!
அளவில் சிறியதாகவும் முன்னனுபவம் அதிகமற்றதுமான ராணுவத்துக்குத் தலைமை தாங்கிய பெர்ஷிங்கிற்கு இதில் சவால்கள் காத்திருந்தன. கடுமையான பயிற்சியை வழங்கியதன் மூலம் அமெரிக்க ராணுவத்தை பலம் உள்ளதாக ஆக்கியதில் அவர் பங்கு மகத்தானது. முக்கியமாக ‘Meuse-Argonne Offensive’ என்பதில் அமெரிக்க ராணுவம் மிக முக்கிய பங்கு வகித்து வெற்றியை ஈட்டித் தந்தது. மியூஸ் நதி பள்ளத்தாக்கு மற்றும் வட கிழக்கு பிரான்ஸில் அமைந்த அர்கோன் காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலைத்தான் Meuse-Argonne Offensive என்பார்கள். இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தினார் ஜான் பெர்ஷிங். ஜெர்மன் ராணுவத்துக்குப் போர்த் தளவாடங்களை எடுத்துச்சென்ற பகுதியைத் துண்டிக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம். இப்படிச் செய்தால் ஜெர்மனியின் நிலை பலவீனமாகிவிடும்.
தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்தின் தரப்பில் பல இழப்புகள் நேரிட்டன. 26,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் இதில் இறந்தனர். சுமார் ஒரு லட்சம் ராணுவ வீரர்களுக்குப் பலத்த காயம். என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. முதலாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் மிக முக்கியமாக அமைந்தது இந்தத் தாக்குதல். போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் இது முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கப் பயணப் படையின் வலிமையை அழுத்தம் திருத்தமாக இது காட்டியது. ஜெர்மனிக்குப் பயத்தை மூட்டியது. முதலாம் உலகப் போர் முடிந்த பிறகு அமைதி உடன்படிக்கை உருவாக்கத்திலும் பங்கு வகித்தார் பெர்ஷிங்.
இதற்குச் சற்று முந்தைய காலகட்டத்தில் அமெரிக்க ராணுவம் முழுமையாகக் களத்தில் இறங்குவதற்குள் வெற்றியைச் சுவைத்து விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள் ஜெர்மானியர்கள். எதிரிகளின் முக்கியமான சில பகுதிகளை மட்டும் கைவசம் கொண்டு வந்தால் கூட அமைதி பேச்சுவார்த்தை நடத்தும்போது அது தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று கருதியது ஜெர்மனி. இது தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் எரிச் லுடென்டார்ஃப் என்பவர் பல திட்டங்களைத் தீட்டினார்.
முதலில் 1918 மார்ச் இறுதியில் வடக்கு பிரான்ஸிலிருந்து ஸோம்மா பகுதி எப்படியாவது தங்கள் வசம் கொண்டுவந்து பிரிட்டிஷ் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்ய வேண்டும் என்பது திட்டமாக இருந்தது. இதற்கு ‘ஆபரேஷன் மைக்கேல்’ என்று பெயரிடப்பட்டது.
அடுத்து பெல்ஜியம் பகுதியிலிருந்து பிளாண்டர்ஸ் பகுதி வரை உள்ள முக்கிய துறைமுகங்களை தங்கள் வசம் கொண்டு வந்தால் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு அளிக்கப்பட்டு வந்த உணவு ராணுவத் தளவாடங்கள் போன்றவை நின்றுவிடும் என்பது ஜெர்மனியின் நிலைப்பாடாக இருந்தது. இந்தத் திட்டத்தை அவர்கள் ‘ஆபரேஷன் ஜார்ஜெட்’ என்று அழைத்தனர்.
ஆஸ்னே நதி பகுதியை தங்கள் வசம் கொண்டு வருவதற்காக அவர்கள் போட்ட திட்டத்தின் பெயர் ஆபரேஷன் ‘ப்ளூச்செர் யார்க்’ (Operation Blücher-Yorck).
இறுதியாக அவர்கள் போட்ட திட்டம் என்று ஆபரேஷன் க்னெஸெனுவைச் (Operation Gneisenau) சொல்லலாம். இது 1918 ஜூன் 9 அன்று நடைபெறத் தொடங்கியது.
ஆனால் இவை எல்லாவற்றிலுமே வெற்றிகள் மிகக் குறைவாகவே கிடைத்தன. கிடைத்த வெற்றிகளையும் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னர், அதுவும் அமெரிக்கா முழு மூச்சாக எதிரணியில் இறங்கிய பிறகு, தங்களுக்கு (மேலும்) தோல்வி முகம்தான் என்பதை ஜெர்மனி உணர்ந்து கொண்டது. ஒருவழியாகச் சரணடையத் தீர்மானித்தது.
– போர் மூளும்…