போபால்மத்திய பிரதேசத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல், பா.ஜ., தேசிய பொதுச்செயலர் கைலாஷ் விஜய்வர்கியா உட்பட, 28 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
ம.பி.,யில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில், 163 இடங்களை ஆளும் பா.ஜ., கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது.
இதையடுத்து, ம.பி.,யின் புதிய முதல்வராக, ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மோகன் யாதவ் பதவியேற்றார். அவருடன், ஜக்திஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்ச்சி, தலைநகர் போபாலில் நேற்று நடந்தது. அப்போது, ஓ.பி.சி., வகுப்பைச் சேர்ந்த 11 பேர் உட்பட 28 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு, கவர்னர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த அமைச்சரவையில், ஐந்து பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், 18 பேருக்கு கேபினட் அந்தஸ்தும்; 10 பேருக்கு இணை அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல், பா.ஜ., தேசிய பொதுச்செயலர் கைலாஷ் விஜய்வர்கியா, நிர்மலா பூரியா, நாராயண் குஷ்வாஹா, நாகர் சிங் சவுகான், பழங்குடி தலைவர் சம்பாதிய உய்கே, விஜய் ஷா, கரண் சிங் வர்மா, ராகேஷ் சிங் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கடந்த அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த ஆறு பேருக்கு மட்டுமே இம்முறை மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் நெருங்கிய ஆதரவாளர் பூபேந்திர சிங் மற்றும் ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த கோபால் பார்கவாவுக்கு அமைச்சரவையில் இடம்அளிக்கப்படவில்லை.
ம.பி., அமைச்சரவையை பொறுத்தவரை, முதல்வருடன் சேர்த்து, 35 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்