போக்கோஸ்: நைஜீரியாவில் கிராமங்கள் மீது ஆயுதக்குழுக்கள் நடத்திய தொடர் தாக்குதலில், 113 பேர் பலியாயினர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
மத்திய நைஜீரியாவில் உள்ள போக்கோஸ் பகுதியில், ஆயுதக்குழுக்களை சேர்ந்த இரண்டு குழுக்கள் துப்பாக்கி சண்டை நடத்தின. 20 க்கும் மேற்பட்ட வெவ்வேறு சமூகங்களை குறிவைத்து உள்ளூர் கொள்கை கும்பல் இத்தாக்குதலை நடத்தியது. போக்கோஸ் பகுதியில் இருந்து பார்கின் லாடி வரை வன்முறை பரவியது.
இதில் 16 பேர் மட்டுமே இறந்ததாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. இந்நிலையில், தற்போது 113 அப்பாவி பொதுமக்கள் பலியான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 300 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை துவங்கிய துப்பாக்கி சண்டை, திங்கள் வரை நீடித்ததால், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் காட்டுமிராண்டி தனமானது எனவும், அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement