தூத்துக்குடி: திருச்செந்தூரில் பொதுப்பணித் துறைக்கு உட்பட்ட ஆவுடையார் குளத்தின் மூலம் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த குளத்தின் கொள்ளளவு 6.5 கன அடியாகும். குளத்தில் 4 மடைகள் உள்ளன. இந்த குளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மழை பொய்த்ததால் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் குளத்தின் கரைப்பகுதி பலமிழந்து காணப்பட்டது. மேலும், குளத்தின் ஷட்டர் சேதமடைந்து காணப்பட்டது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் குளத்தின் கரையையோ ஷட்டரையோ பழுது பார்க்கவில்லை.
இந்நிலையில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழையில் குளத்தின் கரைப்பகுதி சுமார் 70 அடிக்கு உடைந்து வெள்ளம் வெளியே பாய்ந்தது. இதனால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதோடு ஜெயந்தி நகர், கோகுல் நகர், பி.டி.ஆர். காலனி, அன்பு நகர், தென்றல் நகர், குமாரபுரம், மாவீரர் நகர் வரை மழை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த பகுதியில் தண்ணீர் வடிய 5 நாட்களுக்கு மேல் ஆனதால் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளப் பெருக்கில் விதை நெல் வீணானது. நகர்மன்ற உறுப்பினர் செந்தில் குமார் ,விவசாய சங்க தலைவர் சங்கரன் ஆகியோர் முயற்சியில் சுமார் 18,000 மணல் மூடைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக கரை உடைப்பை சரி செய்தனர்.
இந்த உடைப்புகளால் ஆவுடையார் குளத்தின் முழு கொள்ளளவில் தேங்கி இருந்த தண்ணீர் முக்கால் வாசி வெளியேறிவிட்டது. இதனால் இந்தாண்டு விவசாயம் நடக்குமா என்பது கேள்விக் குறி தான் என விவசாயிகள் தெரிவித்தனர். பொதுப்பணித் துறை இனி வரும் காலத்தில் ஆவுடையார் குளத்தை முறையாக கண்காணிக்க வேண்டும் என விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.