நாடாளுமன்றத்தில் இந்தியக் குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) இந்தியச் சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, ‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 புதிய மசோதாக்களை சில திருத்தங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் பெரிய அளவில் இந்த மசோதா மீது விவாதங்கள் நடைபெறவில்லை.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிரோமணி அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், “இந்த புதிய சட்டங்கள் போதிய சோதனைகள் மற்றும் சமநிலை இல்லாமல் காவல்துறைக்கு அதிக அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. இது அவர்களின் தன்னிச்சையான பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். இத்தகைய தன்னிச்சையான அதிகாரங்கள் சுதந்திரம், ஜனநாயகம், கருத்து வேறுபாடு மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிரானது. இது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும். அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல், விவாதங்கள் இல்லாமல் போனால் இதுபோலத்தான் நடைபெறும்.
எனவே, இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்த வேண்டும். அவர்கள் இல்லாத போது மசோதாக்களை விவாதிப்பது ஜனநாயக விரோத நடைமுறை” எனத் தெரிவித்தார். ஆனாலும், குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய மசோதாக்களுக்குக் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்கள் முடிவடைய உள்ள நிலையில், மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்படுகிறோம். புதிய இந்தியத் தண்டனைச் சட்டம் மிகவும் கொடூரமானது. ஏழை, உழைக்கும் வர்க்கம், நலிந்த பிரிவினருக்கு எதிராக இந்தச் சட்டம் அடக்குமுறைக் கருவியாக மாறும். பெரும்பாலான கைதிகள் (விசாரணையின் கீழ் உள்ளவர்கள் உட்பட) ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் அரசியலமைப்பின் 19 மற்றும் 21 வது பிரிவுகளை மீறும் பல விதிகள் இருக்கின்றன. புதிய தண்டனைச் சட்டம் மற்றும் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பாதிப்பை ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் சுமக்க நேரிடும். புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் ‘சட்டத்தின் சரியான செயல்முறையை’ வலுப்படுத்துவதற்குப் பதிலாக, ‘சுதந்திரம்’ (freedom) மற்றும் ‘தனிப்பட்ட சுதந்திரம்’ (personal liberty) ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் இருக்கிறது.
ஒரு கைதிக்கு 60 முதல் 90 நாட்கள் வரை காவல்துறை காவலை நீட்டிக்க முடியும் என்ற புதிய விதி, காவல்துறையின் அத்துமீறலுக்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே, 2024-ம் ஆண்டில் அடுத்து வரும் அரசின் முதல் பணிகளில் ஒன்றாக, இந்த சட்டங்களை மறு ஆய்வு செய்து, கடுமையான விதிகளை அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.