புதுடெல்லி: இந்தியா மீதான உலகின் பார்வை மாறி இருக்கிறது என்றும், நாம் ஒரு நொடியையும் வீணாக்காமல் நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களின் பத்தாவது குரு கோபிந்த் சிங்கின் 4 மகன்களில் இளையவர்களான பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீர் பால் திவஸ் கடந்த ஆண்டு முதல் நினைவுகூறப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பிரதமரின் முன்னிலையில் சீக்கிய இளைஞர்கள் பக்திப் பாடல்களைப் பாடிக்காட்டினர். இதனை அடுத்து வீர சாகசங்களை சீக்கிய இளைஞர்கள் செய்து காட்டினர். மேலும், அணிவகுப்பு ஊர்வலத்தையும் அவர்கள் நடத்திக் காட்டினர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய சிந்தனையைக் காக்க எந்த அளவுக்கும் செல்ல முடியும் என்பதற்கு அடையாளமாக பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகங்கள் உள்ளன. வீர் பால் திவஸ் நிகழ்ச்சிகள் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கிரீஸ் ஆகிய நாடுகளிலும் நடத்தப்படுகிறது. நாம் நமது தேசத்தின் தொன்மத்தின் மீது பெருமை கொள்வதால், மற்ற நாடுகள் நம்மை வேறுபடுத்திப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தியா அதன் மக்களிடம் உள்ள திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது.
நாம் ஒரு நொடியைக்கூட வீணடிக்கக்கூடாது. இதற்கான பாடத்தை நமது குருமார்கள் நமக்கு போதித்திருக்கிறார்கள். நமது தேசத்தின் பெருமையை பாதுகாப்பதாகவும், அதை மறுநிர்மாணம் செய்வதாகவும் நமது நோக்கம் இருக்க வேண்டும். நாடு இன்னும் மேம்பட்ட நிலையை அடைய நாம் பாடுபட வேண்டும். குரு கோபிந்த் சிங்கின் அன்னை மற்றும் 4 மகன்களின் தியாகம் நமக்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது” என தெரிவித்தார்.