புதுடெல்லி: பிரதமர் வேட்பாளரை அறிவிக்காததால் இண்டியா கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1977-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் மொராஜி தேசாய் பிரதமரானார். தேர்தலுக்கு முன் மொராஜி தேசாயின் பெயர் இல்லை என்பது மட்டுமல்ல, கட்சியே கூட அப்போதுதான் உருவானது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து நாட்டின் பிரதமராக மொராஜி தேசாய் பதவியேற்றார். எனவே, தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காததால் பாதிப்பு இருக்காது. மாற்றத்துக்கான மனநிலையில் மக்கள் இருந்தால், அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்” என தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவாலும், தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை அறிவிக்கலாம் என தெரிவித்ததாக செய்தி வெளியாகியது. இண்டியா கூட்டணி இன்னும் இதனை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. எனினும், இந்த யோசனையை ஏற்க விரும்பவில்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாகவும், தேர்தலுக்குப் பின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம் என கூறியதாகவும் தகவல் வெளியானது.
மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதால், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்தார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் விருப்பம் எனக்கு இல்லை என்பதை நான் ஏற்கெனவே திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். எனவே, வேறு ஒரு பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதில் எனக்கு உடன்பாடு இருந்தது” என தெரிவித்தார்.
இதனிடையே, சரத் பவாரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா, “மம்தா பானர்ஜியால் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழியப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை. கூட்டணி உடைவதற்கான வாய்ப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகவே மக்கள் வாக்களிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.