IND vs SA 1st Test, Match Update: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியன் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. உணவு இடைவேளை நிறைவடைந்து தற்போது முதல் நாள் இரண்டாவது செஷன் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்திய அணி பேட்டிங்கில் கடுமையான தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது எனலாம். குறிப்பாக இரு அணிகளின் பிளேயிங் லெவனையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
இந்தியாவின் காம்பினேஷன்
இந்திய அணியில் ரோஹித் சர்மா (Rohit Sharma) உடன் ஜெய்ஸ்வால் ஓப்பனிங் இறங்க, சுப்மான் கில் ஒன்-டவுண், விராட் கோலி வழக்கமாக இறங்கும் டூ-டவுணில் விளையாடுகின்றனர். ஷ்ரேயாஸ் நம்பர் 5, ராகுல் நம்பர் 6 இடங்களில் இன்று களமிறங்கினர். ஜடேஜா இல்லாததால் அஸ்வின் இன்றைய போட்டியில் விளையாடுகிறார். அவர் நம்பர் 7 வீரராகவும் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளராகவும் களமிறங்கினார். தொடர்ந்து, ஷர்துல் – பும்ரா – சிராஜ் – பிரசித் என நான்கு வேகப்பந்துவீச்சு கூட்டணி என இந்தியா களமிறங்கியிருக்கிறது.
தெளிவாக இருக்கும் தென்னாப்பிரிக்கா
ஆனால் தென்னாப்பிரிக்கா அணி தனது வேகப்பந்துவீச்சை மட்டும் நம்பியே களமிறங்கியிருக்கிறது எனலாம். மேலும், அந்த அணியில் இருக்கும் ஒரே ஒரு ஆஃப் ஸிபின்னரும் டாப் ஆர்டர் பேட்டர் மார்க்ரம்தான். சுமார் 40 ஓவர்கள் தற்போது நிறைவடைந்த நிலையில், ரபாடா – யான்சன் – பர்கர் – கோட்ஸி ஆகியோர்தான் பந்துவீசியிருக்கின்றனர். அந்த அணியின் பேட்டிங் ஆர்டரை பார்த்தால் டீன் எல்கர் – மார்க்ரம் – ஸோர்ஸி – பவுமா – கீகன் பீட்டர்சன் – டேவிட் பெட்டிங்கம் – கைல் வெர்ரின் என 7ஆவது வரை உள்ளது. யான்சன் ஆல்ரவுண்டராக 8ஆவது இடத்தில் வருகிறார்.
IND vs SA: இதுதான் பிரச்னை
இதில் இருந்தே இந்தியாவின் திட்டத்திற்கும், தென்னாப்பிரிக்காவின் திட்டத்திற்கும் இருக்கும் வித்தியாசங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியும். நம்பர் 6இல் நமது முன்னணி பேட்டிங் வரிசை முடிந்துவிடுகிறது. அஸ்வின் ஒரு முழுநேர சுழற்பந்துவீச்சாளராகவே பார்க்கப்படுகிறார்.
தென்னாப்பிரிக்காவில் அவருக்கு பெரிய அளவில் பேட்டிங்கில் ரன்கள் வரவில்லை, அது இன்றைய போட்டியிலும் தொடர்ந்து. ஷர்துல் நல்ல பேட்டர் என்றாலும் அவர் 8ஆவது இடத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரியவில்லை.
அடுத்த போட்டியில் என்ன செய்யலாம்?
இந்த நிலையில்தான் இந்திய அணியின் பேட்டிங் தடுமாற்றம் பார்க்கப்படுகிறது. அடுத்து ஜடேஜா அணிக்குள் வரும்போது பெரிய பிரச்னை இருக்காது, ஒருவேளை அடுத்த போட்டியையும் ஜடேஜா தவறவிடும்பட்சத்தில் இந்திய அணி அபிமன்யு ஈஸ்வரன் என்ற கூடுதல் பேட்டருடன் இறங்க வேண்டும் என்பது பலரின் கணிப்பாக உள்ளது.
இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 148 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 38 ரன்களுக்கும், ஷ்ரேயாஸ் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இவர்கள் 83 ரன்களுக்கு நான்காவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோஹித் 5, ஜெய்ஸ்வால் 17, கில் 2 என சொற்ப ரன்களில் டாப் ஆர்டர் சரிந்தது. அஸ்வின் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது கேஎல் ராகுல் 23 ரன்களுடனும், தாக்கூர் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும், பர்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.