“நிதி போதுமானது அல்ல…” – நிர்மலா சீதாராமனிடம் 72 பக்க மனு அளிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதியின் முக்கிய தேவையை சுட்டிக்காட்டி ஒரு விரிவான 72 பக்க கோரிக்கை மனுவை அளித்துள்ளதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான கடலோரப் பகுதிகளைக் கொண்டுள்ளதுடன், கடந்த நூறாண்டுகளில் 50 புயல்களை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு தொடர்ந்து இத்தகைய இயற்கைச் சீற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது. மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளோடு சேர்ந்து, அண்மையில் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையும் மாநிலத்தில் பெரும் சேதத்தை விளைவித்திருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் மூத்த அதிகாரிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தற்போதைய நிலையையும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் பற்றி எடுத்துரைத்தனர். மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளைக் குறித்த விவரங்கள் அடங்கிய 72 பக்க விரிவான கோரிக்கை மனுவையும் அளித்து, இப்பேரிடரை எதிர்கொண்டு, நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஆதாரங்களின் தேவையை வலியுறுத்தினர்.மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே இருக்கும் நிலையில், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதனைவிட பன்மடங்கு மிகுதியாக உள்ளன. எனவே, இதுவரை இல்லாத அளவிலான இந்தச் சவாலான சூழ்நிலையைத் தமிழ்நாடு எதிர்கொள்ளப் போதிய நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என அக்கறையோடு கோருகிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த டிச.17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையின் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, இந்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தில் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.