மல்லி, சாமந்தி, ஆர்கிட்.. ஆண்டுக்கு ரூ.8 கோடி; மலர் விற்பனையில் பாலிவுட்டை கலக்கும் மும்பைத் தமிழர்!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பாலிவுட்டில் நடக்கும் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் பூ சப்ளை செய்வது மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சக்திவேல் என்றால் மிகையாகாது. சக்தி வேல் தனது 8 வயதில் பூ விற்பனையை தொடங்கி இன்றைக்கு பத்மா ஃபுளோரிஸ்ட் என்ற கடை மூலம் வெளிநாடுகளிலிருந்து பூக்களை இறக்குமதி செய்வது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தின் திருநெல்வேலி அருகில் உள்ள ஆழ்வார் திருநகரியை சேர்ந்த சக்திவேலை, பசுமை விகடனுக்காக நேரில் சந்தித்து பேசினோம்.

அப்போது சக்திவேலின் தாயார் 70 வயதிலும் உற்சாகமாக கடையை கவனித்துக்கொண்டிருந்தார்.

இந்தத் தொழிலுக்கு எப்போது எப்படி வந்தீர்கள்?

“என் தந்தை மும்பை, செம்பூர் என்ற இடத்தில் சாலையோரம் டேபிள் ஒன்றை வைத்து அதில் பூ வியபாரம் செய்து வந்தார். எனக்கு 8 வயதாக இருக்கும்போது எனது தந்தைக்கு உதவியாக நானும் பூ வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தேன்.

தாயுடன் பூக்கடையில்

என் அம்மா கட்டிக்கொடுக்கும் பூக்களை எடுத்துக்கொண்டு டவுஷர் அணிந்து கொண்டு பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று குடிசைப்பகுதியில் பூக்களை விற்பனை செய்வேன்.

என் தந்தை பூ விற்பனை செய்யும் பணம் மறு நாள் பூ வாங்குவதற்கு சரியாகிவிடும். எனவே, நான் விற்பனை செய்து கொண்டு வரும் பணத்தில்தான் குடும்பம் நடந்தது. எனக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு திருமண அலங்காரம், கோயில் அலங்காரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பூ ஆர்டர் எடுத்து சப்ளை செய்ததோடு நாங்களே அலங்காரமும் செய்து கொடுத்தோம். அதன் பிறகுதான் ஓரளவு கையில் பணம் தங்க ஆரம்பித்தது. உடனே நாங்கள் பூ வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இடத்தில் சொந்தமாக ஒரு கடையை வாங்கி வியாபாரத்தை அந்த இடத்திற்கு மாற்றினோம். அதே இடத்தில் மேலும் இரண்டு கடைகளை வாங்கி பூஜை பொருள்கள் அனைத்தையும் விற்பனை செய்யும் வகையில் வியாபாரத்தை விரிவுபடுத்தினோம்.”

பூ வியாபாரத்தை தவிர்த்து வேறு எந்த மாதிரியான வேலையில் ஈடுபடுகிறீர்கள்?

“தற்போது சொந்தமாக நான்கு திருமண மண்டபங்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறோம். அதோடு மற்ற திருமண மண்டபங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பூ, கார்பெட், அலங்காரம் போன்ற அனைத்தையும் நாங்களே சப்ளை செய்து வருகிறோம். பாலிவுட்டிற்கு தேவையான பூ அலங்காரங்களையும் நாங்கள் ஆர்டர் எடுத்து செய்து கொடுக்கிறோம். இதற்கு அதிகமாக பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்துகிறோம். பாலிவுட் படப்பிடிப்புக்கு தேவையான திருமண அலங்காரம், கோயில், முதலிரவு செட் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பூக்கள் மூலம் செய்து கொடுக்கிறோம். இது தவிர பாலிவுட் பிரமுகர்களின் வீட்டு விஷேசங்களுக்கும் நாங்கள் பூக்கள் சப்ளை செய்துகொண்டிருக்கிறோம்.

மலர்கள்

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தின் போது தேவையான பூக்களை நாங்கள்தான் சப்ளை செய்தோம். ஸ்ரீதேவியின் மரணத்தின் போது அவரது உடல் எந்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் என்று தெரியாமல் ஆறு முறை பூ ஆர்டர் கொடுத்து ரத்து செய்துவிட்டு 7வது முறை ஆர்டர் கொடுத்த பூக்களைத்தான் பயன்படுத்த முடிந்தது.

நடிகை ஹேமாமாலினியின் மகள் இஷா தியோல், நடிகர் அனில் கபூர் மகள் சோனம் திருமணத்தின் போது நாங்கள்தான் பூக்கள் சப்ளை மற்றும் அலங்காரம் செய்து கொடுத்தோம். புனே அருகே பாராமதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு சொந்தமான ஒரு ஹாலில் நாங்கள்தான் தேவையான பூ அலங்காரம் செய்து கொடுத்திருக்கிறோம். இது தவிர புனே, கோவா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களுக்கு சென்று திருமண அலங்காரங்கள், கோயில் அலங்காரங்களை செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.”

பூக்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

“மகாராஷ்டிராவில் சாங்கிலி, நாசிக், வசாய், புனே, விரார், தாலேகாவ் போன்ற இடங்களிலிருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை, சென்னை போன்ற இடங்களிலிருந்து பூக்களை வாங்குகிறோம். தாய்லாந்திலிருந்து நாங்கள் நேரடியாக எங்களுக்கு தேவையான அலங்கார ஆர்கிட் பூக்களை தேவைக்கு தக்கபடி இறக்குமதி செய்து கொள்கிறோம்.

அதிகப்படியான பூக்கள் வரும் போது அவற்றை குளிர்சாதன கிடங்கில் சேமித்து வைக்கிறோம். இதற்காக நவிமும்பை பகுதியில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். இப்போது மேலும் இரண்டு கடைகளை எடுத்து வியாபாரத்தை விரிவுபடுத்தி இருப்பதோடு, கடையிலேயே சிறிய அளவில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கையும் தொடங்கி இருக்கிறோம். இதனால் பூக்களை சேமித்து வைத்து பயன்படுத்த முடிகிறது.

மலர்களுடன்

சில நேரங்களில் மல்லிகைபூ குறைந்த விலையில் கிடைத்தால் அதனை வாங்கி சேமித்துக்கொள்வோம். வெளிநாடு மற்றும் உள்நாட்டில் யார் எங்கிருந்து எங்களுக்கு பூ ஆர்டர் செய்தாலும் அவர்களுக்கு அவர்கள் சொன்ன தேதியில் பூக்களாகவோ, பூ அலங்காரமாகவோ சப்ளை செய்கிறோம். அதோடு குறிப்பிட்ட தேதியில் பிறந்த நாள், திருமண நாள் போன்ற நல்ல நாட்களில் பூக்கொத்து ஆர்டர் செய்தால் அதனையும் குறிப்பிட்ட நாளில் அனுப்பி வைக்கிறோம். துபாய், லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு குளிர்சாதன வசதியுடன் பூக்களை அனுப்பி இருக்கிறோம். பூஜை சாமான்கள், கொழு பொம்மைகளை தமிழ் நாட்டிலிருந்து வாங்குகிறோம். ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போது தொடங்கி அது பிறந்து வளர்ந்து திருமணமாகி, வயதாகி கடைசிக் காலம் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து பொருள்களும் எங்களது கடையில் கிடைக்கும்.”

கடையின் ஆண்டு வருமானம் எவ்வளவு?

“எங்களுடைய கடையில் எப்போதும் 60 ஊழியர்கள் இருப்பார்கள். கணபதி விழா போன்ற விழாக்காலங்களில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவார்கள். இப்போது ஆண்டுக்கு 8 கோடியில் இருந்து 10 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தப் பூக்கடை தொடங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.