நியூயார்க் / புதுடெல்லி: அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (US CDC) சமீபத்திய தரவுகளின்படி, கரோனா வைரஸின் ஓமிக்ரான் என்னும் வேரியன்ட்டின் புதிய துணை வேரியன்ட் ஜேஎன்.1 (JN.1) கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 44.2% பேருக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த புதிய ஜேஎன்1 வைரஸ் பாதிப்பினால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் மூவர் உயிரிழந்ததும் கவலைகளையும் அச்சங்களையும் அதிகரித்துள்ளது.
பொதுவாகவே குளிர்கால வானிலை, மக்களை காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் என்று முடக்கிப் போட்டுவிடும் நிலையில், பிற வைரஸ்கள் பரவுவதால் கோவிட் 19-ஐ ஏற்படுத்தும் கரோனா வைரஸான SARS-CoV-2, தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸின் சமீபத்திய திரிபு வடிவமான ஜேஎன்.1 என்ற வைரஸ் மிகவும் அதிகம் பரவக் கூடியது என்று யேல் பல்கலைக்கழக மருத்துவ அறிக்கையும், அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பும் தெரிவிக்கின்றன. குளிர் காலங்களில் ஜேஎன்.1 கரோனா வேரியன்ட் பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.