ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால் காசா, பாலஸ்தீனத்தின் நிலைமையே காஷ்மீருக்கும் ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “நாம் நண்பர்களை மாற்ற முடியும் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது. நமது அண்டை வீட்டாருடன் நட்புடன் இருந்தால், இருவரும் வளர்ச்சியடையலாம் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.பிரதமர் மோடியும் இது போருக்கான நேரம் இல்லை. பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பேச்சுவார்த்தை எங்கே? நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார். பேச்சுவார்த்தை (இந்தியாவுடன்) நடத்த தயார் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், என்ன காரணத்தினால் நாம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கிறோம்? பேச்சுவார்த்தை மூலமாக நாம் ஒரு தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலின் குண்டு வீச்சுக்கு உள்ளாகி வரும் காசா, பாலஸ்தீனத்தின் நிலையே நமக்கும் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து கடந்த ஒருவார காலமாக வரும் பதற்றமான செய்திகளுக்கு மத்தியில் பரூக் அப்துல்லா இவ்வாறு தெரிவித்திருப்பது அதிக கவனம் பெறுகிறது. முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் தேரா கி கலி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த வாரம் புதன்கிழமை பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மோதல் தொடர்ந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக வியாழக்கிழமை மாலையில் ஒரு லாரி மற்றும் ஒரு ஜீப்பில் கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த வாகனங்கள் மீது ரஜவுரி எல்லையை ஒட்டிய பூஞ்ச் மாவட்டத்தின் தாத்யார் மோர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு தீவிரவாதிகளைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூன்று பேரை ராணுவத்தினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்தனர். இதுகுறித்து வதந்திகள் பரப்பப்பட்டதால் பூஞ்ச், ரஜவுரியில் சனிக்கிழமை இணைய சேவை முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.