தஞ்சாவூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ஜெகன் (42). அ.ம.மு.க பிரமுகரான இவர், நொளம்பரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மேலும் ரெட்டிபாளையம் பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஜெகன், மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மீன்வாங்குவதைப்போல நடித்த மர்ம கும்பல், ஜெகனை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலைசெய்தது. இது குறித்து நொளம்பூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கெனவே திருவாரூரில் நடந்த கொலைகளுக்கு பழிக்குப்பழியாக ஜெகன் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது.
அது தொடர்பான கொலை வழக்கில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர்ப் பகுதியைச் சேர்ந்த மகேஷ், அறிவு, சிவா, சுதாகர் உட்பட சிலர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இந்தக் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவனாகச் செயல்பட்ட மாரி என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக போலீஸார் மாரியைத் தேடிவந்த நிலையில் அவர் ஆந்திராவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திராவுக்குச் சென்ற தனிப்படை போலீஸார் மாரியை துப்பாக்கிமுனையில் கைதுசெய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின
இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், “ஜெகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கூலிப்படைத் தலைவனான மாரி மீது கொலை, கொலை முயற்சி உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சென்னையில் ஜெகனைக் கொலைசெய்துவிட்டு வடமாநிலங்களுக்கு தப்பிச் சென்றுவிட்டார். கொலைசெய்யப்பட்ட ஜெகன் மீதும் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதனால் ஜெகன், தன்னுடைய சொந்த ஊரிலிருந்து குடிபெயர்ந்து சென்னைக்கு வந்தார். ஆனாலும் அவரின் எதிர் டீம் சென்னையில் வைத்தே ஜெகனைக் கொலை செய்து விட்டது. தற்போது கைதாகியிருக்கும் மாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். அப்போது ஜெகனின் கொலைக்குப் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும்” என்றனர்.