டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஜனவரியில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. 2 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் 2021 ஏப்ரலில் 2-வது கரோனா அலை உச்சத்தை தொட்டது. உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகின. அதன்பின்னர் கடந்த 2022 ஜனவரியில் 3-வது கரோனா அலை ஏற்பட்டபோது நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மீண்டும் கரோனா தொற்று பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. உயிரிழப்புகளும் ஏற்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடகாவில் மூன்று உயிரிழப்பும் பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு நாடு முழுவதும் மொத்தமாக இதுவரை 4,44,72153 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை 5,33,337 பேர் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்தியாவில் நேற்று புதிதாக 628 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், இந்தியாவில் உள்ள புதிய கோவிட் மாறுபாட்டை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும், மாநிலங்கள் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.