பெங்களூரு : ”கொரோனா தொற்று பரவினால், வீட்டிலேயே ஏழு நாட்கள் தனிமையில் இருப்பது கட்டாயம். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்,” என கர்நாடக சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கர்நாடகாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதால், கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, 6,403 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 74 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியானது. தட்சிண கன்னடா, மைசூரில் தலா ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்தனர்.
464 பேர் பாதிப்பு
மொத்தம் 464 பேர் தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில், 16 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 41 பேர் சாதாரண பிரிவிலும், 25 பேர் சிறப்பு வார்டிலும், 423 பேர் வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தலைமையிலான அமைச்சரவை துணை கமிட்டி கூட்டம், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது.
அமைச்சர்கள் மஹாதேவப்பா, சரண பிரகாஷ் பாட்டீல், எம்.சி.சுதாகர் உட்பட கொரோனா தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. கூட்ட நெரிசல் மிக்க பகுதிக்கு செல்லாமல், மக்களே தங்களுக்கு சுய கட்டுப்பாடு விதித்து கொள்ள வேண்டும்
காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி ஏற்பட்டால், வீட்டிலேயே ஏழு நாட்கள் தனிமையில் இருப்பது கட்டாயம். வீட்டில் இருப்பதற்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். கொரோனா விடுமுறை அளிப்பது கட்டாயம். அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்
குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால், பள்ளிக்கு அனுப்பினால் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வீட்டிலேயே தனிமையில் இருப்பது அவசியம். அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்தி, முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும்
கர்நாடகாவில், ஜெ.என்.1 உருமாறிய கொரோனா மேலும் அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. ஒரே நாளில் 34 பேருக்கு பரவியது. பரிசோதனையை அதிகப்படுத்தினால், மேலும் எண்ணிக்கை அதிகமாகும். இனி தினமும் 5,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படும்
இதற்கு முன்பு முதல் அலை, இரண்டாம் அலையின் போது ஏற்பட்ட பாதிப்பு தற்போது நடக்க கூடாது என்று முதல்வர் கூறியுள்ளார். எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
மாநிலம் முழுதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக நான்கு நாடமாடும் ஆக்சிஜன் மையங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
30,000 தடுப்பூசி
முன்னெச்சரிக்கையாக 30,000 தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது
வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தப்படும். சுகாதார ஊழியர்களுக்கு தொற்று தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்