புதுடெல்லி: யூடியூப் சேனலில் 2 கோடி பின்தொடர்வோரை கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது.
உலகத் தலைவர்கள் பலருக்கும் யூடியூப் சேனல் உள்ளது. இதில் அவர்கள் பற்றிய செய்திகள் மற்றும் வீடியோக்கள் இடம் பெறும். இதை உலகம் முழுவதும் பலர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நேற்று 2 கோடி என்ற இலக்கை கடந்துள்ளது. இந்த இலக்கை எட்டிய முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் பிரேசில் அதிபர் ஜேர் பல்சனரோ உள்ளார். இவரது யூடியூப் சேனலை 64 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 3-வது இடத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். இவரது யூடியூப் சேனலை 11 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 4-வது இடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார். இவரது யூடியூப் சேனலை 7 லட்சத்து 94 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
உலகத் தலைவர்களின் யூ டியூப் சேனல்களில் உள்ள விஷயங்கள் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்ற கணக்கிலும், பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் முதல் இடத்தில் உள்ளது. இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடியின் யூ டியூப் சேனல் 224 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. இது ஜெலன்ஸ்கியின் யூடியூப் சேனல் பார்க்கப்பட்டதை விட 43 மடங்கு அதிகம்.
பிரதமர் மோடியின் உலகளா விய ஈர்ப்பு மற்றும் டிஜிட்டல் திறன் ஆகியவைதான் யூடியூப் சேனலில் உலகத் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி முதல் இடத்தில் இருப்பதற்கான காரணம் என கூறப்படுகிறது. மோடியின் யூடியூப் சேனலில் வீடியோ காட்சிகள் மொத்தம் 450 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன. இந்த சாதனைதான் அவரது உலகளாவிய பிரபலத்துக்கு காரணம் கூறப்படுகிறது. உள்நாட்டு மற்றும்சர்வதேச அரசியல் அரங்கில் மேலோங்கி நிற்பதால் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் ஆதிக்கம் செலுத்துகிறது.