கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் 2014ம் ஆண்டு தொடங்கியது. அப்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, அந்த நாட்டின் தென் பகுதியான கிரீமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது. அதன்பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்றதால் உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா முழு அளவிலான போரை தொடங்கியது.
ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்துவருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் உதவி செய்கின்றன. போரில் இரு தரப்பிற்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. போரை நிறுத்தும்படி ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்நிலையில், கிரீமியா பகுதியில் உள்ள பியோடோசியா துறைமுகத்தை குறிவைத்து உக்ரைன் விமானப்படை தாக்குதல் நடத்தியது. விமானத்தில் இருந்து வழிகாட்டி ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ரஷிய கடற்படை கப்பல் சேதமடைந்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
இந்த தாக்குதலின்போது விமான எதிர்ப்பு அமைப்பு மூலம் நடத்தப்பட்ட பதிலடியில் உக்ரைனின் இரண்டு போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய கப்பல் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை. எனினும், துறைமுகத்தில் தீப்பற்றி எரிவது போன்ற வீடியோக்கள் உக்ரைன் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.