புதுடில்லி: “வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 3வது முறையாக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 295 முதல் 335 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். இண்டியா கூட்டணி 165 முதல் 205 இடங்களைக் கைப்பற்றும்” என ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. இந்நிலையில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா அல்லது இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கருத்துக்கணிப்பு
இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து, கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் லோக்சபா தேர்தலில், 3வது முறையாக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 295 முதல் 335 தொகுதிகளில் வெற்றிபெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கும். இண்டியா கூட்டணி 165 முதல் 205 இடங்களைக் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
பா.ஜ.,
மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி அதிகபட்சமாக
வட மாநிலங்களில் 180 தொகுதிகளில் 150 – 160 தொகுதிகளிலும்,
மேற்கு பிராந்தியங்களில் 78 தொகுதிகளில் 45 -55 தொகுதிகளில்,
கிழக்கு பிராந்தியங்களில் 153 தொகுதிகளில் 80 -90 தொகுதிகளில்,
தென் மாநிலங்களில் 132 தொகுதிகளில் 20-30 தொகுதிகளில் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இண்டியா கூட்டணி
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தென்மாநிலங்களில் 70-80 தொகுதிகளைக் கைப்பற்றும். கிழக்கில் 50-60 தொகுதிகளையும்,
வடக்கில் 20-30 தொகுதிகளையும், மேற்கில் 25-35 தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.
47.2 சதவீதம்
மேலும், தென்மாநிலங்கள் பா.ஜ., கூட்டணிக்கு பெரும் சவாலாக இருக்கும். பீஹார், பஞ்சாப், மஹாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
தேசிய அளவில் பா.ஜ., கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். பிரதமர் மோடியின் ஆட்சி திருப்தியளிப்பதாக 47.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்