காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி 150 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டார். இதில் 4,500 கிலோமீட்டர் தூரம் நாடு முழுவதும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து கடந்த 21-ம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மீண்டும் ஒரு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து புதிய யாத்திரையை மேற்கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். முதல் முறையாக நடத்தப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரை செல்லாத இடங்களில் இரண்டாம் கட்ட ஜோடோ யாத்திரை நடத்த ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் இன்று அளித்த பேட்டியில், ”ராகுல் காந்தி நடத்த இருக்கும் பாரத் நியாய யாத்திரை 6,200 கிலோமீட்டர் கொண்டதாக இருக்கும். ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20-ம் தேதி மும்பையில் முடிவடையும்.
இந்த யாத்திரை மணிப்பூர், நாகலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஷ்கர், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் வழியாக மும்பைக்கு வந்து சேரும். இந்த யாத்திரை பஸ் மூலம் நடத்தப்படும். நகரங்களுக்குள் சிறிது தூரம் நடந்து மக்களை சந்திப்பார். இந்த யாத்திரையின் போது இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுவார். 65 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரை 14 மாநிலங்களில் 85 மாவட்டங்கள் வழியாக செல்லும். பஸ் மூலம் யாத்திரை மேற்கொள்வதன் மூலம் வழியில் அதிகப்படியான மக்களை சந்திக்க முடியும்” என்று தெரிவித்தார்.
மக்களவை தேர்தலையொட்டி ராகுல் காந்தி இந்த யாத்திரையை மேற்கொள்கிறார். அதோடு வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு நியாயம் கேட்கும் விதமாகவும், சமுதாய மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைக்கிறார். மும்பையில் ராகுல் காந்தியின் யாத்திரையை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டு இருப்பதாக மும்பை காங்கிரஸ் நிர்வாகி கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நளின் கோலி, ”பாரத் ஜோடோ ஐடியாவை ஏற்கனவே மக்கள் நிராகரித்துவிட்டனர். சில கோஷங்களை உருவாக்குவதன் மூலம் மக்களை முட்டாளாக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 2014-ம் ஆண்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி உண்மையான நியாயத்தை வழங்கிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் முதல் ஜோடோ யாத்திரைக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி கர்நாடகா மாநிலத்தில் வெற்றி பெற்றது.
ஆனால் மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இரண்டாம் கட்ட யாத்திரை மக்களவை தேர்தலை கொண்டு நடத்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் தற்போது மகாவிகாஷ் அகாடிக்கு சாதகமான போக்கு இருக்கிறது. கருத்துக்கணிப்புகளில் மகாவிகாஷ் அகாடிக்கு மக்களவை தேர்தலில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது. இதனால் ராகுலின் யாத்திரை மும்பையில் முடியும் படி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.