சின்ன பட்ஜெட் படத்திலும் வில்லனாக மாறிய பிரித்விராஜ்
சமீப ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் அவரவர் திரையுலகில் ஹீரோக்களாக நடித்து வரும் நடிகர்கள் மற்ற மொழிகளில் வில்லனாக நடிக்க மிகப்பெரிய சம்பளம் கொடுத்து அழைக்கும்போது சந்தோஷமாக ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பு பயணம் புது ரூட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்தவாரம் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடிகர் பிரித்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்பிற்கும் வரவேற்பு கிடைத்தது.
இதற்காக மலையாளத்தில் அவர் ஹீரோவாக வாங்கக்கூடிய தொகையை விட மிகப் பெரிய தொகை சலார் படத்தில் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது. இப்படி பெரிய பட்ஜெட் படங்களில் தான் ஒருவேளை இவர் வில்லனாக நடிப்பாரோ என்று நினைத்தால் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரித்விராஜ்.
ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் இயக்குனர் விபின் தாஸ் இந்த படத்தை இயக்க, அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து கவனம் ஈர்த்த மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் தான் இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிரித்திவிராஜ் படப்பிடிப்பில் கலந்து கொள்வது வெறும் 12 நாட்கள் மட்டுமே. ஏற்கனவே முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது நான்காம் கட்டப்பட படிப்பில் பிரித்விராஜ் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் கதையும் தனது கதாபாத்திரமும் பிடித்து போனதால் தான் மற்ற பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு இந்த படத்திற்காக நாட்களை ஒதுக்கி தந்துள்ளார் பிரித்விராஜ்.