பெய்ஜிங்: கண் அறுவை சிகிச்சையின்போது வயதான நோயாளியை தலையில் தாக்கிய மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனாவில் கண் அறுவை சிகிச்சைக்காக 82 வயது பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிசிச்சைக்காக அவருக்கு மருத்துவர் குறிப்பிட்ட ஓரிடத்தை மட்டும் மரத்துப் போகச் செய்வதற்கான மயக்கமருந்தை செலுத்தியுள்ளார். அம்மூதாட்டிக்கு முழுமையாக மயக்கம் வராத நிலையில் அறுவை சிகிச்சையின் போது அவர் புலம்பியுள்ளார். அவரால் மருத்துவரின் எச்சரிக்கையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் மருத்துவர் அந்நோயளியை மூன்று முறை தலையில் தாக்கியுள்ளார். இவை அனைத்தும் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் குய்காங்-ல் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்துள்ளது. இந்தநிலையில் அந்தக் காட்சிகளை, வூகானில் கோவிட் பரவத் தொடங்கிய போது பொது மக்களை எச்சரிக்கை செய்த மருத்துவக் குழுவில் இருந்த மருத்துவரான அய் ஃபென், வைபோ தளத்தில் பகிர்ந்துள்ளார். இது சீன சமூகவலைதளங்களில் சமீபத்தில் வைரலானது.
இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிகிச்சைக்காக அந்த நோயாளிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டது. சிகிச்சையின் போது நோயாளி தனது தலையையும், விழி பந்துகளையும் அசைத்துக் கொண்டே இருந்தார். உள்ளூர் மொழியில் பேசிய அவரால் மருத்துவரின் எச்சரிக்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் மருத்துவர் அந்நோயாளியை கடுமையாகக் கையாண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, மூதாட்டி தாக்கப்பட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துமனையின் தாய் நிறுவனமான ஏய்ர் சீனா (Aier China), அந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவரை பணி இடைநீக்கமும், மருத்துவமனையின் சிஇஓவை பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது. சம்மந்தப்பட்ட முதிய நோயாளியிடம் மன்னிப்பு கோரியுள்ள மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு 500 யுவான் நிவாரணமாக வழங்கியுள்ளது. என்றாலும் அம்மூதாட்டியின் மகன் தனது தாயாருக்கு இடது கண்ணில் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.