கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வர் உட்பட 34 அமைச்சர்கள் உள்ளனர். 31 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களும் சில மாதங்களுக்கு முன்பே நியமிக்கப்பட்டனர்.
இவர்களின் பெரும்பாலான அமைச்சர்கள் யார் என்றே மக்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு அவர்களது செயல்பாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமைச்சர்கள் பரமேஸ்வர், ஹெச்.கே.பாட்டீல், முனியப்பா, ராமலிங்கரெட்டி, எம்.பி.பாட்டீல், ஜார்ஜ், தினேஷ் குண்டுரான், மஹாதேவப்பா, பிரியங்க் கார்கே, சந்தோஷ் லாட் உட்பட சில அமைச்சர்கள் மட்டுமே மக்கள் மத்தியில் அதிக அளவில் தென்படுகின்றனர்.
இவர்களிலும் பெரும்பாலானோர் மாவட்ட வாரியாக செல்வது அரிதாகவே உள்ளது. இதற்கிடையில், சரணபசப்பா கவுடா தர்சனாபூர், மல்லிகார்ஜுன், ரஹீம் கான், திம்மாபூர், வெங்கடேஷ், டி.சுதாகர், மங்கள் வைத்யா ஆகிய அமைச்சர்கள் யார் என்று பலருக்கு தெரியாத அளவுக்கு அவர்களின் செயல்பாடு உள்ளது.
அவர்களின் எப்படி இருப்பார்கள், எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது, எந்த மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் என்பது கூட பலருக்கு தெரியாது.
காங்கிரஸ் ஆட்சி அமைந்து, எட்டு மாதங்கள் ஆகியும் அமைச்சர்கள் ஆர்வத்துடன் பணியாற்றவில்லை என்று மாநில மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சாலை மேம்பாடு, குடிநீர் பிரச்னை, வறட்சி நிவாரணம் உட்பட அடிப்படை பிரச்னைகளை அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை. தொகுதி மேம்பாடு நிதி இருந்தும், வளர்ச்சி பணிகள் முடங்கி இருப்பதாக மக்கள் கவலையில் உள்ளனர்.
சட்டசபை தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க காண்பித்த ஆர்வம், இப்போது இல்லை என்ற அதிருப்தி வெளிப்படுத்துகின்றனர். இனியும் இதே நிலை நீடித்தால், லோக்சபா தேர்தல் வேளையில் பிரச்னை ஏற்படுவது உறுதி என்றே சொல்லப்படுகிறது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் அமைச்சர்களை அழைத்து எச்சரிக்கா விட்டால் மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி கொண்டே இருப்பர். வாக்குறுதி திட்டங்களுக்கு காண்பிக்கும் அக்கறை, வளர்ச்சி பணிகளுக்கு காட்டவில்லை என்று பா.ஜ.,வினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி தரவில்லை என்று ஆளுங்கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும், கலெக்டர்கள் வங்கி கணக்கிலேயே போதுமான அளவுக்கு நிதி இருப்பதாக அரசு சொல்கிறது. இதை, மக்களால் ஏற்றகொள்ள முடியவில்லை.
இனியாவது மக்கள் பிரச்னைகளுக்கும், வளர்ச்சி பணிகளுக்கும் அமைச்சர்கள் செவி சாய்ப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்