சென்னை: உலகம் முழுவதும் நாளை (ஜன.1) ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது.“எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024 ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: விவசாயிகளையும், சிறு குறு நிறுவனங்களையும், தமிழக மீனவர்களையும் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் மத்தியில் ஒன்றிய அரசை இண்டியா கூட்டணி அமைக்கும் என்ற நிலையை உருவாக்க நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான உறுதி எடுத்துக்கொண்டு, இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம்; கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம்; மதச்சார்பின்மையைக் காப்போம் என சூளுரைத்து அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: பாஜக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களில் இருந்து விடுவிக்க தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முதல்கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தின் மூலம் பாஜகவுக்கு எதிராக 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து இண்டியா கூட்டணியை அமைத்திருக்கின்றன. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மீண்டும் பாரத நியாய யாத்திரையை ஜனவரி 14 ஆம் தேதி ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20 அன்று மும்பையில் நிறைவு செய்கிறார். இந்த நடைபயணத்தின் மூலம் பாஜக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின் தொடக்கமாக வருகிற ஆங்கில புத்தாண்டு அமைய இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அகம்பாவம், ஆணவம், துரோகம், கொடூரச் சிந்தனை, நாகரிகமற்ற பேச்சு போன்றவை அகன்று, ஒழுக்கம் என்னும் மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களான அன்பு, அமைதி, எளிமை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை வளரும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு மலரட்டும். வலிமையான பாரதம், வளமான தமிழகம் உருவாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழ்நாட்டின் வரலாற்றில் 2024 ஆம் ஆண்டு தவிர்க்க முடியாத ஆண்டாக அமையப்போவது நிச்சயம். அரசியல், சமூகநீதி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல துறைகளில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பல தவறுகள் புத்தாண்டில் திருத்தப்படும். தங்களின் நலனுக்காகவும், தங்களின் உரிமைகளுக்காகவும் உண்மையாக போராடக்கூடியவர்கள் யார்? என்பதை மக்கள் அறிந்து அங்கீகரிக்கும் ஆண்டாக அமையும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மழை, வெள்ளம், புயல் என பேரிடர்களால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் தமிழக மக்கள் அனைவரின் பொருளாதாரத்தை மீட்கும் ஆண்டாகவும், பொய்த்துப் போன பருவமழை, வரலாறு காணாத வறட்சி, இயற்கைப் பேரிடர்கள் என தன் வாழ்க்கை முழுவதும் துயரத்தை மட்டுமே அனுபவித்து வரும் உழவர் பெருமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆண்டாக புத்தாண்டு அமையும் என நம்புகிறேன். மலரும் புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயர்வான வாழ்க்கையையும், நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியைத் தரும் ஆண்டாக அமையட்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, நல்லாட்சி நடைபெறவும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வு மேம்படவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் மத்திய மாநில அரசுகளும், பொது மக்களும் உறுதி ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாகும் வகையில், உலக நாடுகளின் ஒற்றுமை மேலோங்கும் வகையில் இப்புத்தாண்டு அமைய வேண்டும்.
சமக தலைவர் சரத்குமார்: கடந்த கால இன்னல்கள் நீங்கி, தமிழக மக்கள் வாழ்வில் ஏற்றமும், அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ்ந்திட வேண்டியும், சாதி, மத, இன, மொழி, பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைக்க பாடுபடுவோம் என உறுதியேற்றும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்: இந்தியப் பொருளாதார நலிவு நீங்கி, வறுமை அகன்று, தொழில் பெருகி, வேலை வாய்ப்பு கூடி, விவசாயப் பெருங்குடி மக்கள் உரிய வருமானம் அடைந்து, உழைப்போர் உயர்ந்து, இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிட்டி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிடவும், ஜாதி – மத பேதமின்றி மகிழ்வுடன் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திடவும், இவ்வாண்டில் இந்திய மக்களின் வாழ்வு உயர, வளம் பெருக, உலக அரங்கில் இந்தியா மிளிர, உயர அனைவரும் பாடுபட சபதமேற்போம்.