‘விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது?’ என்பது தொடர்பாக, இந்த எபிசோடில் பூர்ணிமாவிற்கு கமல் சொன்னது அத்தனையும் திருவாசகம்.
அது பூர்ணிமாவிற்கு மட்டுமல்ல, நமக்கும் கூட கச்சிதமாகப் பொருந்தும். அத்தனை சிறப்பான உபதேசம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதன் மதிப்பு பூர்ணிமாவிற்குத் தெரியவில்லை. எனவே வழக்கம் போல் கண்கலங்கி அமர்ந்திருந்தார்.பூர்ணிமா பிடிக்கும் முயலுக்கு கால்கள் மட்டுமில்லை, காதுகளும் கிடையாது போலிருக்கிறது. எதையுமே அது கேட்பதில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு அகம் டிவிக்குள் வந்த கமலின் விசாரணை முறை இந்த எபிசோடில் பொதுவாக இப்படித்தான் இருந்தது. வீட்டில் பிரதானமாக இரண்டு அணிகள் இருப்பது, கார்டன் ஏரியாவில் இருக்கும் பறவைக்கு கூட தெரிந்திருக்கிறது. எனவே அதை சர்காஸ்டிக்காக வெளிப்படுத்தும் கிண்டலாகத்தான் கமலின் பெரும்பாலான அணுகுமுறை இருந்தது. ‘என்ன சொல்லியும் திருந்தவா போறீங்க?’ என்கிற விரக்தியை பல்வேறு கிண்டல்களின் மூலம் பதிவு செய்தார்.
இந்த இரண்டு அணிகளில், தினேஷ் அணி கமலின் கேள்விகளை சாதுர்யமாக எதிர்கொள்கிறது. தினேஷ் அழுத்தமான குரலில் தர்க்கரீதியான விளக்கம் தருவார். பிறகு அழுத்திக் கேட்டால் ஒருமாதிரியாக தவற்றை ஒப்புக் கொள்வார். விஷ்ணுவோ சங்கடமான சிரிப்புடன் விளக்கம் தந்து அப்புறமாக ஒப்புக் கொள்வார். மணி குற்றவுணர்வுடனான சிரிப்புடன் உடனே ஒப்புக் கொள்பவர். ரவீனா கள்ள மௌனம் அல்லது குழந்தைத்தனத்தில் தப்பிக்க முயல்பவர்.
ஆனால் எதிரணியைப் பார்த்தால் மாயா மட்டுமே அதில் புத்திசாலி. தன் தரப்பில் தவறு இருக்கிறது என்றால் தானே முந்திக் கொண்டு சொல்லி விடுவார். கூடவே ஒரு மாயச் சிரிப்பையும் தந்து மன்னிப்பு கேட்டு விடுவார். நிக்சன், தினேஷின் வேறு வகையான நகல். தர்க்கரீதியாக நிறைய விளக்கம் தருவார். ஆனால் மன்னிப்பு எளிதில் வராது. விசித்ரா வேறு கேட்டகிரி. அவர் மீது தூசு கூட பட்டு விடக்கூடாது. சிவாஜி கணேசன் மாதிரி அவரின் முகத்தில் உணர்ச்சிகள் தாண்டவமாடும். அத்தனை எளிதில் தன் தவறை ஒப்புக் கொள்ள மாட்டார். மன்னிப்பும் கேட்க மாட்டார். அதிலும் குறிப்பாக இந்த எபிசோடில் விசித்ரா தந்த எக்ஸ்பிரஷன்ஸ்களையெல்லாம் வீடியோவாக தொகுத்தால் சுவாரசியமாக இருக்கும். ஒரு தரமான சீரியல் ஆர்ட்டிஸ்ட் ரெடி. கொடுமை செய்யும் மாமியார் பாத்திரத்திற்குச் சரியாக பொருந்திப் போவார்.
பூர்ணிமாவின் விநோதமான உடல்மொழி
இதில் உச்சபட்ச காமெடி என்பது பூர்ணிமாதான். சிலருடைய முகத்தைப் பார்த்தவுடனேயே போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் வந்து விடும். அப்படியொரு எக்ஸ்பிரஷன்கள் பூர்ணிமாவிடமிருந்து வெளிப்படும். அவர் தவறே செய்திருக்காவிட்டாலும் “யோவ் ஏட்டு.. ஆளு மூஞ்சே சரியில்ல. ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வா. விசாரிப்போம்” என்று சொல்கிற அளவிற்கு திகிலான முகத்துடன் இருப்பார். தன்னுடைய தவறு பற்றித்தான் பேசுகிறார்கள் என்பது தெரிந்தும் சங்கடமான சிரிப்புடன் தலையைக் குனிந்தபடி இருப்பார். யாராவது குற்றம் சொல்லி விட்டால் ‘என்னது, யாரைப் போய்?!’ என்று அதிர்ச்சியுடன் ‘பாரேன்’ என்று மாயாவைப் பார்ப்பார். அல்லது ஏதாவது சிரித்து கமெண்ட் அடிப்பார். எழுந்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தாலோ, ஒரு எபிசோடிற்கு அது நீளும். மன்னிப்பு என்பது எளிதில் வராது. பிறகு கண்ணீருடன் தன்னை நியாயப்படுத்தி மாய்ந்து மாய்ந்து பேசுவார்.
விசாரணை நாட்களில் தினேஷ் அணி அதிக டேமேஜ் ஆகாமல் எளிதாக சுதாரித்துக் கொள்வதின் ரகசியம் இதுதான் என்று தோன்றுகிறது. ‘பூர்ணிமாவையே கமல் அதிகம் விசாரிக்கிறாரோ’ என்று தோன்றுவதற்கு வேறு யாருமே காரணமில்லை. அது பூர்ணிமாதான். புதைகுழியில் விழுந்து விட்டால் ஆடாமல் அசையாமல் இருந்தால் கூட அதிலிருந்து தப்பிக்க வாய்ப்புண்டு. மாறாக பதட்டத்தில் துள்ளிக் கொண்டே இருந்தால் இன்னமும் ஆழமாகச் சென்று விடுவோம். பூர்ணிமாவின் பின்னடைவுகள் இப்படித்தான் நேர்கின்றன.
தன்னம்பிக்கையுடன் பதில் சொல்லும் தினேஷ்
அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், உற்சாகமாக செயல்பட்ட நடுவர்களான விஜய் மற்றும் அர்ச்சனாவைப் பாராட்டினார். தான் ஆட்டத்தில் இல்லை என்கிற சோகத்தை ஒதுக்கி வைத்து விட்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய அந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் நன்று. ஆனால் ஸ்பிரிட் ஆஃப் த கேம் என்றில்லாமல் ஆடிய வகையில் பூர்ணிமாவை தனியாக கட்டம் கட்டி விசாரிக்கத் துவங்கினார் கமல். “போட்டியில் முயலாமல் தோல்வியடைவது கேவலம். ஆனால் முயன்று தோற்பது பெருமைதான். அந்தத் தோல்வியைப் பற்றி துப்புத் துலக்கிப் பார்க்கலாம். ஆனால் துப்பிப் பார்க்கக்கூடாது. பூர்ணிமா செஞ்சதைத்தான் சொல்றேன்” என்று கமல் நிறைய ஹிண்ட் குடுத்தும் பூர்ணிமா சங்கடமான சிரிப்புடன் அமர்ந்திருந்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.
“ஏன் அப்படிச் செஞ்சீங்க பூர்ணிமா?” என்று கமலே அழுத்தி கேட்க வேண்டியிருந்தது. “ஸாரி சார். அவங்க ரெண்டு பேரும் ஸ்ட்ராட்டஜியா பண்ணாங்க சார்” என்கிற அற்பமான காரணத்தைச் சொன்னார் பூர்ணிமா. யார்தான் அங்கு ஸ்ட்ராட்டஜி பண்ணவில்லை?! “அப்ப. க்ரூப் க்ருப்பா விளையாடினாங்களா?” என்று நடுவராக இருந்த அர்ச்சனாவின் சாட்சியத்தைக் கோரினார் கமல். “ஆமாம் சார். தினேஷ் அவுட் ஆகி வந்தப்புறம் மணி, விஷ்ணுவிற்கு ஆதரவா கத்திட்டு இருந்தார். நான் கூடஆட்சேபம் செஞ்சேன். இது க்ரூப் கேம் மாதிரி தெரியுதுன்னு. ஆனா தினேஷ் எரிஞ்சு விழுந்தார்” என்று அர்ச்சனா சொல்ல, கமலின் பார்வை தினேஷின் பக்கம் சென்றது.
பூர்ணிமாவைப் போல் தினேஷ் ஆடு திருடிய கள்ளன் போல் விழிக்கவில்லை. தன்னம்பிக்கை நிறைந்த முகபாவத்துடன் எழுந்து “ஆடியன்ஸா இருந்து என்கரேஜ் பண்ணேன் சார்” என்று சிரித்துக் கொண்டே சாதித்தார். “அதுக்குப் பேர் ஐடியா கொடுக்கறது. இப்ப நான் பேசறதுக்கு ஆடியன்ஸ் கைத்தட்டினா அதுக்கு பேர்தான் ஆதரவு. நான் என்ன பேசணும்னு அவங்க சொல்லி, , நானும் அதைக் கேட்டா அவங்களும் நானும் ஒரு கூட்டணில இருக்கோம்ன்னு அர்த்தம்” என்று வீட்டில் இருக்கும் குழு மனப்பான்மையை நையாண்டியாக எடுத்துரைத்தார் கமல். ‘ஒத்த கருத்துடையவர்கள்’ன்னு வெச்சுக்கலாம் சார்” என்று கமலுக்கே டஃப் பைட் கொடுத்தார் தினேஷ். (என் கிட்டயேவா தம்பி. நான் எழுதின டிவிட் எல்லாம் படிச்சிருக்கியா?!)
“ஓகே. ரெண்டு அணின்னு முடிவாயிடுச்சு. எதிர் அணில இருக்கறது யாரு?” என்று கமல் கேட்க “நிக்சன், பூர்ணிமா, விசித்ரா” என்று மூவரின் பெயரைச் சொன்ன தினேஷ், மாயாவின் பெயரைச் சேர்க்கவில்லை. ஒன்று மாயா மீது தினேஷிற்கு உள்ள சாஃப்ட் கார்னர். அல்லது தினேஷின் கூட்டணியிலும் மாயா இருக்கிறார் என்பது அதன் காரணம். விசித்ராவின் பெயரை தினேஷ் உச்சரித்த அடுத்த கணமே முகச்சுளிப்பை வெளிப்படுத்தினார் விசித்ரா. இந்த ரீதியில் எபிசோடு முழுக்க விசித்ராவின் முகத்தில் கதகளி ஆட்டம் நடந்து கொண்டேயிருந்தது.
எபிசோடு முழுக்க தாண்டவமாடிய விசித்ராவின் முகபாவங்கள்
“ஓகே.. யார் ஜெயிக்கணும்ன்னு ஆடினீங்க?” என்று கேள்வியை மாற்றிப் போட்டார் கமல். “இந்த ஆட்டத்தில் இருக்க சிலருக்கு தகுதியில்லன்னு பேசினாங்க சார்” என்று சொன்ன தினேஷ், அதைச் சொன்னதாக நிக்சனை கைகாட்டினார். மாயாவும் இதை பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் தினேஷ் அதை சௌகரியமாக மறந்து விட்டார். “ஓகே. அப்ப யாருக்கு தகுதியில்லை. நிக்சன் சொல்லுங்க” என்று கமல் கேட்க, அவரோ எதிர் அணியில் உள்ள நால்வரையும் மொத்தமாக கை காட்டினார். “தகுதியில்லைன்னு முடிவு பண்ணப் போறது மக்கள்தான் சார். இருக்கற வரைக்கும் இருந்து ஃபேமெண்ட் வாங்கிட்டுப் போயிடலாம்ன்னு சிலர் இருக்காங்க” என்று தினேஷ் சொல்ல “யாரு அது?” என்று விடாமல் நோண்டினார் கமல். ‘விசித்ரா’ என்று தினேஷ் சொன்னதும் கதகளி நடனம் உக்கிரமாகத் தொடர்ந்தது.
“சரி. யாரு ஜெயிக்கணும்ன்னு நெனச்சீங்க?” என்று கேட்கப்பட்ட போது ‘மணி மற்றும் விஷ்ணு’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் தினேஷ். “பாருங்க. மணிக்கு சிரிப்பு வருது. கல்லை ஒளிச்சி வெச்சிக்கிட்ட மாதிரி அதையும் ஒளிச்சு வெச்சிக்கிறார்’ என்று ஒரு விஷயத்தை இன்னொன்றோடு பின்னி எடுத்துச் செல்வதில் மாஸ்டர் என்று நிரூபித்தார் கமல். “நான் தனியா ஆடத்தான் முடிவு பண்ணேன். ஆனா அப்புறம் பார்த்தா முடியல. விஷ்ணுவிற்கு ஐடியா கொடுத்ததே நான்தான்” என்று ஒப்புக் கொண்டார் மணி.
‘நான் மொள்ளமாறி. நான் முடிச்சவிக்கி’ என்று ஒரு நகைச்சுவைக் காட்சியில் கவுண்டமணியும் செந்திலும் மாறி மாறி வாக்குமூலம் தந்து கொள்வார்கள். அது போலத்தான் இங்கும் நிகழ்ந்தது. ஆனால் தினேஷ் குழு அதை ஒப்புக் கொள்ளும். பூர்ணிமா குழு ஒப்புக் கொள்ளாது என்பதுதான் வித்தியாசம். “அது சரி.. விசித்ரா கோட்டை ஏன் கலைக்கப்படவேயில்லை?” என்று கமல் கேட்க “அது தன்னாலேயே சரிஞ்சுடும் சார். டிசைன் அப்படி. சேர்க்கை சரியில்லை” என்று சிக்ஸர்களாக அடித்தார் விஷ்ணு. வழக்கமாக கமலைப் பார்த்தால் பம்மி அமர்ந்திருக்கும் விஷ்ணு, இன்று உற்சாக மோடில் இருந்தார். கமலும் சிரித்து ஆதரித்த காரணத்தினால் எதிரணியை நையாண்டி தோரணங்களால் கிழித்துக் கொண்டிருந்தார்.
‘டீம். ஏ. டீம்.. பி ன்னு ரெண்டு அணி இருப்பது உறுதி’
“திருடப் போனாலும் திசை இருக்கணும்ன்ற மாதிரி, விசித்ரா கேம் புரியாம நிக்சனோட கல்லை எடுக்கப் போயிட்டாங்க. தெரிஞ்சவுடனே ஸ்லோ மோஷனுக்கு மாறிட்டாங்க. நிக்சன் பாசத்துக்குரிய பையன்” என்று விஷ்ணு விளக்க கமலால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விசித்ராவின் முகத்திலோ டென்ஷன் ஏறியது. “சரி. ரெண்டு டீமும் உட்காருங்க. நடுவர்கள் கிட்ட விசாரிப்போம்” என்று குத்தலாக சொன்னார் கமல். “முயல் மூச்சு விடறதுக்கு இடம் விட்டு கல்லை வெச்சு கட்டினாங்க ரவீனா” என்று விஜய் சொன்ன போது ரவீனாவின் ஜீவகாருண்யம் குறித்து நெகிழ்வாக இருந்தது. “ஆனா விசித்ரா மம்மியோ முயலை புதைச்சு மாலையே போட்டுட்டாங்க” என்றார் விஜய். “சரி.. தனித்தனியா ஆடறீங்களோன்னு நெனச்சேன். Team A, Team B-ன் இருக்கு போல” என்று கமல் சொன்னதும் “ஆமாம் சார். ஹிஹி’ என்று ஒப்புக் கொண்டார் விஷ்ணு.
கமலின் தலை மறைந்ததும் விசித்ராவின் முகத்தில் பாப்கார்ன் வெடித்தது. “அது என்ன சேர்க்கை சரியில்லைன்னு சொல்றே.. ஜாக்கிரதையா பேசு. டிக்கெட் வாங்கிட்டவுடனே தலைக்கனம் வந்துடுச்சா..” என்று விஷ்ணுவை வெளுத்து வாங்கினார் விசித்ரா. அவரோ எதையோ சொல்லி சமாளித்து சென்று, தான் வென்ற டிக்கெட்டை காமிராவில் காண்பித்து “சொல்ல மாட்டேன். ஆனா மக்களுக்கு ஏதாச்சும் நிச்சயமா செய்வேன்” என்றார். அது என்னமோ, உலக அழகிப் போட்டி முதல் உள்ளூர் கபடி போட்டிவரை எதிலாவது வென்றால் மக்களுக்கு சேவை செய்யும் தியாகவுணர்வு பீறிட்டுக் கொண்டு வந்து விடுகிறது.
“போர்டு டாஸ்க்ல நீங்க ஏன் வரலை?” என்று தினேஷிடம் நிக்சன் கேட்டது அபத்தம். “நீதானப்பா கூப்பிட்டிருக்கணும். நான் ஏன் அதைப் பத்தி யோசிக்கணும்” என்று தினேஷ் சொன்ன கவுன்ட்டர் சரியானது. “நீங்க மாயா கூட சேர்ந்து ஆடினீங்க” என்று பூர்ணிமாவும் இந்த ஜோதியில் கலந்து கொள்ள, அனைத்திற்கும் சோர்ந்து விடாமல் மல்லுக்கட்டினார் தினேஷ்.
வெளிவராமல் போன குறும்படம்
கமல் உள்ளே வந்ததும் “ஒரே கூத்தா இருக்கு சார். மாட்டிக்கிட்டு முழக்கிறேன்.” என்று விசித்ரா அலுத்துக் கொள்ள “சண்டையா. சொல்லுங்க. என்ன..” என்று ஆவலானார் கமல். இந்த எபிசோடை இன்னமும் ஓட்டியாக வேண்டுமே?! தினேஷ் எழுந்து விளக்க ஆரம்பிக்க “ஒரு சிறிய இடைவேளைன்னு சொல்லிட்டுப் போனேன். ஆனா பழைய விஷயத்தையே பேசி அடிச்சுக்கறீங்க. சண்டை போடறீங்க சரி. அதை புதுசாவாவது செய்ய வேண்டாமா?” என்று அவர் செய்த நையாண்டி அருமை.
“அர்ச்சனா. நீங்க பிக் பாஸ் கிட்டயே ஏதோ அறிவிப்பு செஞ்சீங்களே. அது என்ன?” என்று கமல் அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பிக்க கூட்டத்தில் கைத்தட்டல் கேட்டது. கார்டு கேமில் நிக்சன் செய்த மோசடி, விஜய் செய்த உதவி ஆகியவை தொடர்பாக பிரமோவில் பார்த்து விட்டு ஆவலாக வந்தவர்களுக்கு வழக்கம் போல் ஏமாற்றம்தான். “நெயில்பாலிஷ் மார்க் இருந்தது” என்று உற்சாகமாக சாட்சியம் சொல்ல ஆரம்பித்த அர்ச்சனா பின்பு சுருதியிறங்கி “ஆடு களவு போன மாதிரி கனவு கண்டேன்” என்று முடித்து விட்டார்.
‘பிக் பாஸையே கேட்போம்’ என்று கமல் மேலே பார்த்த போது குறும்படம் வெளியாகுமோ என்று தோன்றியது. இல்லை. அதுவும் ‘புஸ்’ என்று போயிற்று. இது தொடர்பாக நிக்சன் மற்றும் விஜய்யிடம் விசாரித்த கமல் “அவ்ளதானே. நீங்க தப்பு பண்ணலை இல்லையா.. ஏன்னா.. வெளிய சந்தேகப்படறாங்க” என்று சம்பிரதாயமாக இந்த விசாரணையை முடித்து விட்டார். எனில் நிக்சனும் விஜய்யும் சொன்ன விளக்கம் ஏற்கத்தக்கது என்று பொருளா? நிக்சன் கார்டை சுரண்டவில்லை, அது காட்சிப்பிழை என்று அர்த்தமா? “பாருங்கப்பா.. விசாரிச்சுட்டோம். ஒண்ணும் நடக்கலை..” என்று வெளியுலகத்திற்கு கமல் காட்ட விரும்பினாரா? அல்லது உண்மையிலேயே இது பார்வையாளர்களின் ஆர்வக்கோளாறால் ஊதிப்பெருக்கப்பட்டதா? இது அவரவர்களுக்கே வெளிச்சம்.
பார்வையாளர்களைப் போலவே அர்ச்சனாவிற்கும் குறும்படம் வெளியாகும் என்கிற ஆவல் ஏற்பட்டது. “அப்படி ஏதாச்சும் நடந்துச்சா?” என்று உற்சாகமானவர், கமல் விசாரணையை சாதாரணமாக முடித்து விட்டதும் காற்று போன பலூன் மாதிரி ஆகி விட்டார். அதையும் விட இவர்கள் தன் பக்கம் திரும்பி விடப் போகிறார்கள் என்கிற அச்சம்தான் அவரை ஆட்கொண்டது. கமலின் தலைமறைந்ததும் விசித்ரா மறுபடியும் கதகளி நடனத்தை உக்கிரமாக ஆரம்பித்தார்.
அர்ச்சனாவை அர்ச்சனை செய்த விசித்ரா
போன பிரேக்கில் விஷ்ணுவை காய்ச்சியதைப் போல இந்த முறை அர்ச்சனாவை பிடித்துக் கொண்டார். “அது எப்படி நெயில்பாலிஷ் மார்க் இருந்ததுன்னு சொல்லலாம். கிறுக்குத்தனமா பேசாத” என்றெல்லாம் விசித்ரா எரிந்து விழ “மேம். நான் நடுவரா இருந்து எல்லாத்தையும் சந்தேகப்பட்டுத்தான் ஆகணும். அது என் உரிமை. ஆனா அப்படி எதுவும் இல்லைன்னு நானே சொல்லிட்டேனே. அப்புறம் என்ன?” என்று அர்ச்சனா போதுமான விளக்கம் தந்தாலும் விசித்ராவின் கோபம் கண்ணை மறைத்து விட்டது. ஆனால் அர்ச்சனா சொல்லும் போது புரியாத விஷயம், மாயா விளக்கும் போதுதான் விசித்ராவிற்கு புரிந்து கோபம் சற்று தணிந்தது. கண்களைச் சிமிட்டி சிமிட்டி தலையை கோதிக் கொண்டார்.|
“மாயாவை நீங்கதான் ஜெயிக்க வெச்சீங்க” என்று தினேஷிடம் இன்னொரு விவாதத்தை பூர்ணிமா நீளமாக செய்து கொண்டிருந்தார். “அவங்க கிட்ட பேசி ஜெயிக்கவே முடியாது. சொன்னதையே சொல்லுவாங்க” என்று இன்னொரு பக்கம் ரவீனாவிடம் மணி அனத்திக் கொண்டிருந்தார். அதையே அடுத்த தலைப்பிற்கான ஐடியாவாக பிக் பாஸ் டீம் எடுத்துக் கொண்டார்களோ, என்னவோ!.
பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல் “முயல் டாஸ்க் நடந்ததால ஒரு கேள்வி. தான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்ன்னு இங்க சாதிக்கறவங்க யாரு?” என்று அவர் கேட்க அடுத்த கணமே ஒருமனதாக எல்லோர் மனதிலும் பூர்ணிமாதான் நினைவிற்கு வந்திருக்க வேண்டும். கமலின் டார்கெட்டும்தான் அதுதானே என்னவோ?! இதை ஆரம்பித்து வைத்த தினேஷ், பூர்ணிமாவின் பெயரோடு விசித்ராவின் பெயரையும் இணைத்துக் கொண்டது எதிர்பார்த்ததுதான். “கல்வெட்டுல எழுதி வெச்சு பக்கத்துலயே உக்காந்துக்குவாங்க” என்று பூர்ணிமாவை ரகளையாக கிண்டலடித்தார் விஷ்ணு. (மனிதர் இன்று ஃபுல் பார்மில் இருந்தார்!). “இப்பக் கூட அதான் சார் பண்ணாங்க. கில் டாஸ்க்ல பூர்ணிமா வந்திருந்தா நான் என்னையே கில் பண்ணியிருப்பேன்” என்று மணியும் இறங்கி அடிக்க பூர்ணிமாவின் முகத்தில் பதட்டம் பெருகிக் கொண்டே போனது.
பூர்ணிமா என்கிற முயல் ராணி
அடுத்து எழுந்த ரவீனா ‘சொல்ல பயமா இருக்கு” என்று பூர்ணிமாவின் பெயரைச் சொல்லி கூடவே நிக்சனின் பெயரையும் இணைத்துக் கொண்டார். அடுத்ததாக வந்த அர்ச்சனாவும் பூர்ணிமா பெயரைச் சொல்லி கூடவே விசித்ராவின் பெயரை இணைத்தார். சற்று முன் நடந்த நெயில்பாலிஷ் விவாதத்தை அர்ச்சனா உதாரணம் காட்ட விசித்ராவின் எக்ஸ்பிரஷன்கள் திகிலூட்டும் அளவில் சென்றன. அது கமலுக்கே பீதியை ஊட்டியிருக்குமோ என்னவோ?! “அப்படில்லாம் யாரையும் சட்டுன்னு குத்தம் சொல்லிடக்கூடாது. அதுல உண்மை இல்லைன்றதாலதான் அவங்களுக்கு இவ்வளவு கோவம் வருது’ என்று விசித்ராவை சமாதானப்படுத்தும் அளவிற்கு கமல் பேசினார்.
அடுத்து ஆத்திரத்துடன் எழுந்த விசித்ரா “இங்க எல்லோருமே அப்படித்தான்” என்று எரிச்சலாக சொல்லி விட்டு அரைமனதாக பூர்ணிமாவின் பெயரைச் சொன்னார். “அவங்க பேசற விதமே அப்படித்தானோ, என்னவோ” என்ற விஜய்யும் பூர்ணிமாவின் பெயரையே குறிப்பிட்டார். மாயாவும் பூர்ணிமாவிற்கு சற்று சப்போர்ட் செய்து விட்டு அர்ச்சனாவின் பெயரைச் சொன்னார்.
பெரும்பான்மையான நபர்களால், ஏன். எல்லோராலும் சுட்டிக் காட்டப்பட்ட பூர்ணிமா எழுந்து நின்றார். முகத்தில் ஆத்திரம், பதட்டம், அழுகை, கழிவிரக்கம் என்று எல்லா உணர்வுகளும் நிறைந்திருந்தன. தானே சுட்டிக் காட்டினால், பூர்ணிமா பிறகு புறணி பேசுவாரோ என்னமோ என்று நினைத்து விட்ட கமல் “உங்க அம்மா வந்தப்ப கூட என்ன சொன்னாங்க. ரொம்ப நீளமா விளக்கம் கொடுக்காதேன்னு… சொன்னாங்கள்ல.. சுருங்கச் சொல்லுதல் ஒரு கலை. எனக்கோ, உங்க அம்மாவிற்கோ உங்க மேல பொறாமையா என்ன.. சிலருக்கு ஐம்பது வயசுலதான் புரியும். இதுவொரு அற்புதமான வாய்ப்பு. Constructive Criticism-ஆ இல்லைன்னா அதைப் பத்தி யோசிக்கவே யோசிக்காதீங்க” என்று உபதேசத்தோடு சொல்லி விட்டு “இப்பச் சொல்லுங்க. யார் அந்த முயல்?” என்று கேட்டார்.
“எல்லோருமேதான் இங்க பண்றாங்க. நான்தான் அவங்களை உக்கார வைச்சு தெளிவுப்படுத்த முயல்வேன். ஆனா பாதிலயே எழுந்து போயிடறாங்க சார்.” என்று அடிபட்ட குரலில் பூர்ணிமா சொல்ல “அதான் சொன்னேனே. ஒரு விளக்கத்தை ஏத்துட்டு சரின்னு போறது ஒரு வழி. ‘அம்மா. தாயே போதும் விட்டுடுன்னு ஒத்துக்கிட்டு போறது இன்னொரு வழி. மத்தவங்க உங்களைப் பத்தி சொல்றதையெல்லாம் கன்வின்ஸ் பண்றதை விட ஒருவேளை அது இருக்குமோன்னு சந்தேகப்படுங்க. இருந்துச்சின்னா. அதை இல்லாமப் பண்ண முடியுமான்னு பாருங்க. அந்த விமர்சனமெல்லாம் பொய்ன்னா அதைக் கண்டுக்கவே கண்டுக்காதீங்க. அதுல டைம் பண்றது வேஸ்ட்டு. உங்க சக்தியை அதுல செலவழிக்காதீங்க” என்று கமல் சொன்னதெல்லாம் பூர்ணிமாவிற்கு மட்டுமானதல்ல. பொருந்தாத விமர்சனங்களின் மீது மல்லுக்கட்டி நேரத்தை செலவழிக்கும் அனைவருக்குமானது. காழ்ப்புணர்வுடன் எழும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் மௌனம்தான். ‘கடுப்பேத்தறவங்க கிட்ட கம்முன்னும் உசுப்பேத்தறவங்க கிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்” என்று விஜய்ண்ணா ஏற்கெனவே சொல்லி விட்டார்.
என்னோட பரம எதிரி தினேஷ்தான் – விசித்ரா
“நானும் பண்றேன் சார்” என்று கடைசியாக ஒப்புக் கொண்ட பூர்ணிமாவிடம் “அந்த முயல் லிஸ்ட்ல நான் இல்லல்ல. ஹப்பாடா! தப்பிச்சேன்” என்று கமல் நிம்மதியடைந்ததில் இருந்து பூர்ணிமாவின் புறணி பவர் நன்றாகத் தெரிகிறது. அடுத்து எழுந்த நிக்சனும் பூர்ணிமாவின் பெயரைச் சொல்ல சபை கலகலத்தது. ஆனால் அதை சம்பிரதாயத்திற்குச் சொல்லி விட்டு எதிரணியில் இருந்த நால்வரையும் ஒட்டுமொத்தமாக சுட்டிக் காட்டி கூட்டணி தர்மத்தை காப்பாற்றினார் நிக்சன். “நாங்க தனியா விளையாடினாலும் எதிர் டீமிற்கு தப்பாத்தான் தெரியுது. அவங்க பார்வை அப்படி” என்று சாதித்த நிக்சன் “போர்டு டாஸ்க்கில் விசித்ரா வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க” என்று சவால் விட “சார். எல்லாமே காமிரால பதிவாகுது. அப்படியெல்லாம் நடக்கலை” என்று சிரித்தார் விஷ்ணு.
“என் முயலை அடிச்சு குழம்பு வெச்சா போதும்ன்னு நெனக்கறவங்க கூட எப்படி டீம் ஆக முடியும்?” என்று தினேஷ் கேட்க “அவர் என் பரம எதிரி” என்று விசித்ரா சொல்ல “இத்தனை வருஷமா கலைத்துறைல இருக்கறேன். என் பரமஎதிரின்னு யாரையும் என்னால நினைக்க முடியலையே?” என்று இழுத்ததின் மூலம் இந்த விவகாரம் எத்தனை அற்பமானது என்பதை விசித்ராவிற்கு உணர்த்த முயன்றார் கமல். (ஆனால் கமல் உண்மையிலேயே அப்படி நினைத்தால் நிச்சயம் பெருந்தன்மையாளர்தான்!). “விசித்ராவோட வெறுப்புதான் என்னோட எனர்ஜி” என்று சொல்லி அவரை இன்னமும் காண்டாக்கினார் தினேஷ்.
“ஓகே.. நாமினேஷன்ல இருக்கறவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க” என்று சொல்லி விட்டு ‘எனக்கு ரொம்ப பசிக்குது. நாளைக்குப் பார்க்கலாம்’ என்று ஜாலியாக கிளம்பி விட்டார் கமல். ‘மூன்று கால் முயல்’ விவகாரத்தில் தன்னையே எல்லோரும் சுட்டிக் காட்டியது, கமல் அளித்த உபதேசம் போன்ற விஷயங்கள் பூர்ணிமாவை வழக்கம் போல் சங்கடப்படுத்தி விட்டன. கண்கலங்கி அமர்ந்திருந்த அவரிடம் “அக்செப்ட் இட்” என்று சொல்லி ஆறுதல் சொன்னார் மாயா.
‘உலகமே ஏன் தன்னை எதிரியாக நினைக்கிறது என்று அத்தனை பேரையும் குற்றவாளிக்கூண்டில் நிற்க வைப்பதை விடவும், ஒரேயொரு நபரை, அதாவது தன்னை, சுயபரிசீலனையுடன் திரும்பிப் பார்ப்பது மிக எளிதான விஷயம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதுதான் பலருக்கும் கடினமான விஷயமாக இருக்கிறது.