ஹூப்பள்ளி : சட்டசபை தேர்தலின் போது, ஷிவமொகா தொகுதியில் போட்டியிட ஈஸ்வரப்பா விரும்பினார். ஆனால், மூத்தவர்களுக்கு சீட் இல்லையென, பா.ஜ., மேலிடம் கூறியதால், ‘தேர்தல் அரசியல் ஓய்வு’ அறிவித்தார்.
தன் மகன் காந்தேஷுக்கு சீட் எதிர்பார்த்தார். ஆனால் மகேஷ் டெங்கினகாய்க்கு சீட் கிடைத்தது.
சில மாதங்களாக அமைதியாக இருந்த ஈஸ்வரப்பா, லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் சுறுசுறுப்படைந்துள்ளார்.
ஹாவேரி தொகுதியில் சீட் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மத்திய தலைவர்களுடன் நிரந்தர தொடர்பில் உள்ளார்.
ஹூப்பள்ளியின் மயூரா எஸ்டேட்டில் உள்ள, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் வீட்டுக்கு, நேற்று காலை ஈஸ்வரப்பா, திடீரென வருகை தந்தார். இருவரும் சிறிது நேரம் பேச்சு நடத்தினார்.
தன் மகன் காந்தேஷுக்கு, லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்க செய்யும்படி, ஜோஷியிடம், ஈஸ்வரப்பா வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
ஈஸ்வரப்பா கூறுகையில், ”நான் இங்கு வந்ததில், எந்த முக்கியத்துவமும் இல்லை. நான் வந்தால், செய்தியாகி விடுகிறது. ஜோஷியும், நானும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன்,” என்றார்.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:
ஈஸ்வரப்பா என் வீட்டுக்கு வந்ததற்கு, சிறப்பு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஏதோ பணி நிமித்தமாக, ஹூப்பள்ளிக்கு வந்துள்ளார். மரியாதை நிமித்தமாக என்னை பார்த்து விட்டு திரும்பினார். அவரது மகன் காந்தேஷ், ஹாவேரி தொகுதியில் நடமாடுகிறார்.
அவருக்கு சீட் தரும் விஷயத்தில், நானும், ஈஸ்வரப்பாவும் அமர்ந்து முடிவு செய்ய முடியாது. இது குறித்து, தேசிய தலைவர் முடிவு செய்வார். நேரம் வரும் போது முடிவெடுப்பர்.
காந்தேஷ் கட்சியின் நல்ல தொண்டன். சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என, பலர் பா.ஜ.,வை விட்டு சென்றனர். ஆனால், ஈஸ்வரப்பா கட்சியிலேயே இருக்கிறார். நேர்மையுடன் பணியாற்றுகிறார். தற்போது அவரது மகனை, தேர்தலுக்கு தயாராக்குகிறார். இதில் தவறேதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்