புதுடெல்லி: தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்குத் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பு சட்டவிரோதமானது என அறிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவ தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரங்களைச் செய்வது, பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஆகியவற்றில் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் எந்த ஒரு தனி நபரோ, அமைப்போ ஈடுபட்டால் உடனடியாக முறியடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பு சையத் அலி ஷா கிலானியால் கடந்த 2004ல் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் ஆதரவாளராகவும், காஷ்மீரி ஜிகாதி குழுக்களின் தலைவராகவும் கருதப்படும் இவர், ஜமாத் இ இஸ்லாமி காஷ்மீர் அமைப்பில் இருந்து விலகியதை அடுத்து, தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பை தொடங்கினார். சையத் அலி ஷா கிலானியின் மறைவுக்குப் பிறகு அந்த அமைப்பின் தலைவராக மசரத் ஆலம் பட் பொறுப்பேற்றார். அவரும், இந்திய எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தானிய ஆதரவுக்குப் பெயர் பெற்றவர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும், அவரது முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் கட்சி கடந்த 27ம் தேதி தடை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.