மவுண்ட் மவுங்கானுய்,
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றிபெற்றது. மழை காரணமாக 2வது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து 14.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி வங்காளதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் நியூசிலாந்து சமன் செய்தது.