சென்னை,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதில், பொருத்தப்பட்டுள்ள `எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
இதுதவிர காலநிலைபற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்’ என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்நிலையில் இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து நாளை காலை 9.10 மணிக்கு கவுண்ட்டவுனை முடித்துக் கொண்டு விண்ணில் பாய்கிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 10 ஆயிரம் பேர் ஆர்வமாக பெயர் பதிவு செய்துள்ளனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
முன்னதாக நேரில் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை முன்பதிவு செய்து, அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கபட்டிருந்தது.