கோயில்கள் தோறும் திருவாசகம் முற்றோதல் செய்யும் குழுவினர் – ஆறு ஆண்டுகளில் 250 முற்றோதல் நிகழ்ச்சி

மதுரை: கோயில்கள் தோறும் சென்று திருவாசகம் முற்றோதல் செய்யும் அறப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தினர். 6 ஆண்டுகளில் 250 முற்றோதல் செய்யும் அறப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இறைவன் சிவபெருமான் அருளியதை மாணிக்கவாசகர் எழுதியது திருவாசகம். அந்த திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பர். அத்தகு திருவாசகம் முற்றோதலை அறப்பணியாகவும், ஆன்மிகப் பணியாகவும் செய்து வருகின்றனர் மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தினர். அருளாளர் மாணிக்கவாசகர் பிறந்த மகம் நட்சத்திரத்தில் மாதந்தோறும் திருவாசகம் முற்றோதல் செய்து வருகின்றனர். கோயில்களில் முற்றோதல் செய்வதோடு, விரும்பி அழைப்போர் இல்ல சுப நிகழ்ச்சிகளிலும் திருவாசகம் முற்றோதல் செய்துவருகின்றனர். கடந்த 6ஆண்டுகளில் 250 முற்றோதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை அண்ணாநகரிலுள்ள மதுரை வடக்கு நகரத்தார் சங்கத் தலைவர் எஸ்.பி.எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறியதாவது: ”எங்களது சங்கத்தில் 125 பெண்கள், 475 ஆண்கள் உள்பட மொத்தம் 600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாதந்தோறும் மாணிக்கவாசகரின் மகம் நட்சத்திரத்தில் அண்ணாநகரிலுள்ள சர்வேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் செய்து வருகிறோம். ஆண்டுக்கொருமுறை பிள்ளையார் நோன்பின்போதும், விஜயதசமியன்று நடைபெறும் அம்பு போடும் நிகழ்ச்சியிலும் திருவாசகம் முற்றோதல் செய்து வருகிறோம். மேலும், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை ஊக்கப்படுத்திட பரிசுகள் வழங்கி வருகிறோம்.

அதேபோல், ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தி வருகிறோம். மேலும் ஆன்மிக சுற்றுலாவும் சென்று வருகிறோம். விரும்பி அழைப்போர் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கும் சென்று திருவாசகம் முற்றோதல் செய்கிறோம். திருவாசகத்திலுள்ள 568 பாட்டுகளை முற்றோதல் செய்ய 5 மணி நேரமாகும். காலையில் 8.30மணிக்கு தொடங்கினால் மதியம் 2.30 மணிவரை முற்றோதல் செய்வோம். கோயில்கள் தவிர்த்து மற்ற இல்ல விழாக்களிலும் சங்கத் தலைவி மீனாட்சி தலைமையில் பெண்கள் முற்றோதல் செய்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 250 முற்றோதல் செய்துள்ளோம். மேலும் எங்களது குழுவினரை தொடர்பு கொண்டு அழைப்போருக்கு திருவாசகம் முற்றோதல் செய்ய தயாராகவுள்ளோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.