லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” யாத்திரையில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: சமூகத்துக்கு அநீதி இழைக்க அனைத்து முயற்சிகளையும் செய்தவர்கள் இன்று நியாய யாத்திரை என்ற பெயரில் கற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் வளர்ச்சியடையும்போது தான் நாடு வளர்ச்சி அடைகிறது என்பது எங்கள் கற்பனை.
பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன் அர்த்தமுள்ள விளைவை இன்று நாடு அனுபவிக்கிறது. நாட்டின் அனைத்துப் பிரிவினரின் மேம்பாட்டிற்கும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கும் நாங்கள் அனைவரும் சபதம் ஏற்றுள்ளோம்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அபார வெற்றி பெறும்” இவ்வாறு ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.